மு.க.ஸ்டாலின் 25-ந் தேதி தூத்துக்குடி வருகை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. அறிக்கை


மு.க.ஸ்டாலின் 25-ந் தேதி தூத்துக்குடி வருகை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. அறிக்கை
x
தினத்தந்தி 19 Feb 2019 11:15 PM GMT (Updated: 2019-02-20T01:57:15+05:30)

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந் தேதி தூத்துக்குடிக்கு வருகிறார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு ஊராட்சிகளுக்கு நேரடியாக சென்று ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி மக்களிடம் கருத்துகள், கோரிக்கைகளை கேட்டறிந்து வருகிறார். அதேபோல் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி வருகிறார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நடக்க உள்ள ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) தூத்துக்குடி வருகிறார்.

அவர் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி ஒன்றியம் கூட்டுடன்காடு ஊராட்சியில் காலை 8.30 மணிக்கு நடைபெறும் ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடம் கருத்துகளை கேட்கிறார். அதன் பின்னர் காலை 10 மணிக்கு புதுக்கோட்டை அருகே உள்ள மங்களகிரி விலக்கில் நடக்க உள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

25-ந் தேதி காலையில் தூத்துக்குடிக்கு வரும் மு.க.ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story