மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. வராததால் தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. வராததால் தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2019 10:45 PM GMT (Updated: 19 Feb 2019 8:35 PM GMT)

ஆலந்தூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு ஆர்.டிஓ. வராததால் தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆலந்தூர் தாலுகா அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த முகாமில் தென்சென்னை ஆர்.டி.ஓ. நாராயணன் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெறுவார் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஓய்வூதியம், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்க ஏராளமான பொதுமக்கள் நேற்று காலை முதல் வந்திருந்தனர். இதில் ஏராளமான முதியவர்களும் காத்திருந்தனர். ஆனால் மதியம் வரை ஆர்.டி.ஓ. வரவில்லை. இதனால் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

முற்றுகை

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், தாசில்தார் ராஜேஸ்வரியை முற்றுகையிட்டு கடும்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தாசில்தார் ராஜேஸ்வரி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story