நாடாளுமன்ற தேர்தல்: காங்கிரசின் 10 தொகுதிகளை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் சித்தராமையா பேட்டி


நாடாளுமன்ற தேர்தல்: காங்கிரசின் 10 தொகுதிகளை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 20 Feb 2019 3:30 AM IST (Updated: 20 Feb 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரசின் 10 தொகுதிகளை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. தேர்தல் கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஆனால் இந்த கூட்டணி கட்சிகள் இன்னும் தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.

தொகுதிகளை பெறுவதில் நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் இல்லை என்று முதல்-மந்திரி குமாரசாமி நேற்று மைசூருவில் கூறினார். இதற்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பதில் அளித்துள்ளார். அவர் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் மாநில அரசு கூட்டணியில் உள்ளது. யாரும் பிச்சைக்காரர்கள் அல்ல. ஜனதா தளம்(எஸ்) பிச்சை எடுக்கவில்லை. நாங்களும் பிச்சை எடுக்கவில்லை. அதற்கான அவசியம் 2 கட்சிகளுக்கும் இல்லை.

நாடாளுமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினோம். நாங்கள் எந்த விஷயத்திலும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

ஆனால் கர்நாடகத்தில் தற்ேபாது 10 தொகுதிகளில் காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளனர். அந்த 10 தொகுதிகளை எக்காரணம் கொண்டும் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம். இது குறித்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம்.

இதில் சமரசத்திற்கு இடம் இல்லை. பயங்கரவாத தாக்குதலில் தேசவிரோத கருத்துகளை கூறுவது தவறு. அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story