15 மாதங்களுக்கு முன் மாயமான வாலிபர் கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 6 பேர் கைது


15 மாதங்களுக்கு முன் மாயமான வாலிபர் கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 20 Feb 2019 4:30 AM IST (Updated: 20 Feb 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே 15 மாதங்களுக்கு முன் மாயமான வாலிபர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய மனைவி மற்றும் கள்ளக்காதலன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர், 

வேலூரை அடுத்த பலவன்சாத்துகுப்பம் பாரதியார்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் வெங்கட்யுவராஜ் (வயது 28). தனியார் நிதிநிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவருடைய மனைவி கோமதி (23) அதேபகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலைபார்த்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற வெங்கட்யுவராஜ், அதன்பின்னர் திரும்பி வரவில்லை.

இதுகுறித்து கோமதி, பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் கோமதி மற்றும் வெங்கட்யுவராஜின் நண்பர்கள், அவர் பணிபுரிந்த நிதி நிறுவனத்தில் விசாரணை நடத்தினர். ஆனால் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், 15 மாதங்களுக்கு பின்னர் வேலப்பாடியை சேர்ந்த ராஜ்குமார் (40) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெங்கட்யுவராஜை கொலைசெய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவரைபிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொடுத்த தகவலின்பேரில் பாகாயம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் மோர்தானா அணை பகுதிக்கு சென்று அங்குள்ள காட்டுப்பகுதியில் கிடந்த வெங்கட்யுவராஜின் எலும்புகூடுகளை கைப்பற்றினர்.

விசாரணையில் கள்ளக்காதல் காரணமாக வெங்கட்யுவராஜை கொலைசெய்தது தெரியவந்தது.

இந்த கொலைகுறித்து ராஜ்குமார் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக போலீசார் கூறியதாவது:-

ராஜ்குமார் அங்குள்ள ஒரு பேக்கரியில் வேலைபார்த்து வந்துள்ளார். அப்போது வெங்கட்யுவராஜின் மனைவி கோமதி வேலைபார்த்த மருந்து கடைக்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது கோமதிக்கும், ராஜ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது வெங்கட்யுவராஜிக்கு தெரியவந்துள்ளது. உடனே அவர் கோமதியை கண்டித்துள்ளார். இதன்காரணமாக கோமதி, ராஜ்குமாருடன் பேசுவதற்கு தடை ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்கட்யுவராஜை கொலைசெய்ய திட்டமிட்டு, ராஜ்குமார், ஆரணியை சேர்ந்த தனது நண்பர்களான செந்தில் (33), வேலு (32), கோட்டீஸ்வரன் (38), விஜய் (23) ஆகியோருடன் சேர்ந்து மதுகுடிக்க செல்வதாகக்கூறி வெங்கட்யுவராஜை அவருடைய மோட்டார்சைக்கிளில் மோர்தானா அணைப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு மதுகுடித்துவிட்டு போதையில் இருந்த வெங்கட்யுவராஜை கழுத்தைநெரித்து கொலைசெய்து, உடலை காட்டுப்பகுதியில் வீசிவிட்டு, அவருடைய மோட்டார்சைக்கிளை குடியாத்தத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையம் அருகில் விட்டுவிட்டு சென்றது தெரியவந்தது.

இந்த கொலைவழக்கில் ராஜ்குமார், செந்தில், வேலு, கோட்டீஸ்வரன், விஜய் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். கணவர் கொலைசெய்யப்பட்டது தெரிந்தும் அதை மறைத்ததாக வெங்கட்யுவராஜின் மனைவி கோமதியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story