நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி நிச்சயம் தோற்கடிக்கப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி நிச்சயம் தோற்கடிக்கப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 19 Feb 2019 11:45 PM GMT (Updated: 19 Feb 2019 10:07 PM GMT)

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

திருப்பூர்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கப்பற்படை புரட்சியின் 73–வது ஆண்டு நினைவு தின கருத்தரங்கு திருப்பூர் பழைய பஸ் நிலையத்தின் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜகோபால் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

5 ஆண்டு கால மோடி ஆட்சி அனைத்து வகையிலும் தோல்வி அடைந்துள்ளது. வடமாநிலங்களிலும் பா.ஜனதாவுக்கு வாய்ப்புகள் குறைந்து விட்டது. இதனால் தென்மாநிலங்களை குறிவைத்து உள்ளே நுழைகின்றனர். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அவர்கள் எடுத்த சந்தர்ப்பவாத அரசியல் தோற்றுவிட்டது.

இதனால் தமிழ்நாட்டில் அவர்கள் நுழைந்துள்ளனர். இந்த நிலையில் அ.தி.மு.க. கட்சி, பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. இந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தோற்கடிக்கப்படும்.

அனைத்து தொகுதிகளிலும் மோடி, எடப்பாடி பழனிசாமி கூட்டணியை வீழ்த்த வேண்டும். நாட்டின் ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. மதவாதம் முறியடிக்கப்பட்டு மத நல்லிணக்கமும், மக்கள் ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 2 ஆயிரத்து 924 மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன.

இதில் 350–க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஒரு பனியன் தொழிலாளி நாளொன்றுக்கு ரூ.300 முதல் ரூ.400 மட்டுமே சம்பளமாக பெறுகிறார். ஆனால் கார்ப்பரேட்டு பெரும் முதலாளிகள் நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் லாபம் ஈட்டுகின்றனர். மோடி ஆட்சியில் கார்ப்பரேட்டு நிறுவன முதலாளிகள் தற்போது கடும் வளர்ச்சியை அடைந்துள்ளனர். இந்த நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு உழைத்து தொழிலாளர்கள், அடித்தட்டு மக்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story