அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு முதுகலை பட்டப்படிப்பு மத்திய குழு உறுப்பினர் ஆய்வு
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு முதுகலை பட்டப்படிப்பு தொடங்குவது தொடர்பாக மத்திய குழு உறுப்பினர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ராமநாதபுரம்,
மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அடுத்தபடியாக ராமநாதபுரத்தில் உள்ள அரசு தலைமை ஆஸ்பத்திரி 17–க்கும் மேற்பட்ட மருத்துவ பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் சுமார் 2 ஆயிரம் வெளிநோயாளிகளும், மாதத்திற்கு 15 ஆயிரம் உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,000 படுக்கை வசதியுடன் கூடிய இங்கு மாதத்திற்கு 500–க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசின் தர ஆய்வு குழுவினர் ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியை ஆய்வு செய்து தரச்சான்று வழங்கி உள்ளனர்.
இந்த நிலையில் இங்கு டி.என்.பி. என்ற மகப்பேறு முதுகலை பட்டப்படிப்பு தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக அகமதாபாத்தில் உள்ள டி.என்.பி. கமிட்டி உறுப்பினர் ஹீனாவிபுல், ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து உள்கட்டமைப்புகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் விரைவில் இங்கு பட்டப்படிப்பு வகுப்புகள் தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார். மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் இந்த ஆண்டே முதுகலை பட்டப்படிப்புக்கான சேர்க்கை நடைபெற உள்ளது.
ஆய்வின்போது மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவகர்லால் உள்பட மருத்துவ அலுவலர்கள் உடனிருந்தனர்.