காரைக்குடி பகுதியில் இரவு நேரத்தில் தொடர் திருட்டு கூடுதல் போலீசாரை ரோந்து பணியில் நியமிக்க வலியுறுத்தல்


காரைக்குடி பகுதியில் இரவு நேரத்தில் தொடர் திருட்டு கூடுதல் போலீசாரை ரோந்து பணியில் நியமிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Feb 2019 10:28 PM GMT (Updated: 19 Feb 2019 10:28 PM GMT)

காரைக்குடி பகுதியில் இரவு நேரங்களில் நடைபெறும் தொடர் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த கூடுதலான போலீசார் ரோந்து பணியில் நியமிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்குடி,

காரைக்குடி நகரம் வேகமாக வளர்ந்து வரும் நகரமாகவும், விரைவில் நகராட்சி அந்தஸ்து பெறக்கூடிய நகரமாகவும் இருந்து வருகிறது. இங்கு ஏராளமான கல்வி மற்றும் அரசு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர அருகே உள்ள புதுவயல் உள்ளிட்ட பகுதியில் ஏராளமான அரிசி ஆலைகள் உள்ளன. நகரில் ஏராளமான கட்டுமான தொழில்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காரைக்குடி பகுதியில் இரவு நேரத்தில் திருட்டும், பகல் நேரங்களில் சங்கிலி பறிப்பு சம்பவமும் அதிகரித்து வருகின்றன. மேலும் காரைக்குடி பகுதியில் நடைபெறும் கட்டுமான வேலைகளிலும், அருகே உள்ள அரிசி ஆலையிலும் அதிக அளவில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர்.

மேலும், போர்வை, மணிபர்ஸ், பெல்ட், பூட்டு உள்ளிட்ட பொருட்களை தினமும் வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் வீதி, வீதியாக நடந்து சென்று விற்பனை செய்து வருகின்றனர். இவர்களின் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கிய பின்பு தான் இந்த பகுதியில் திருட்டு, சங்கிலி பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த பகுதியில் தங்கியிருந்து வேலை பார்க்கும் வடமாநில இளைஞர்கள் குறித்து எவ்வித தகவல்களும் போலீசாருக்கு தெரிவிப்பதில்லை. சமீபத்தில் காரைக்குடி பர்மா காலனி பகுதியில் உள்ள கடை முன்பு இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை சில திருடர்கள் திருடி சென்றனர். இதேபோல் காரைக்குடி அருகே பள்ளத்தூர் பகுதியில் பகலில் வீட்டில் இருந்த மூதாட்டியிடம் குடிக்க தண்ணீர் கேட்பது போல் கேட்டு, மூதாட்டியை தாக்கி விட்டு சங்கிலி பறித்து சென்ற சம்பவமும் நடந்துள்ளது.

எனவே காரைக்குடி பகுதியில் நடைபெற்று வரும் இந்த தொடர் திருட்டு சம்பவத்தை தடுக்கும் வகையில் இந்த பகுதியில் வேலை செய்து வரும் வடமாநில இளைஞர்கள் குறித்த விவரங்களை காரைக்குடி சரக போலீசார் சேகரிக்க வேண்டும். இரவு நேர ரோந்து பணியில் கூடுதல் போலீசார் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தி போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் இந்த பகுதி மக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.


Next Story