மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக வழக்கு: முருகன், கருப்பசாமி ஜாமீன் உத்தரவு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் சமர்ப்பிப்பு மதுரை சிறையில் இருந்து இருவரும் இன்று வெளிவர வாய்ப்பு
மாணவிகளை தவறான் பாதைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரது ஜாமீன் உத்தரவு நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இன்று இருவரும் மதுரை சிறையிலிருந்து விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். அவருடன் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 3 பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களது ஜாமீன் மனுக்கள் மதுரை ஐகோர்ட்டில் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில் முருகன், கருப்பசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து இருவருக்கும் ஜாமீன் வழங்கி கடந்த 12–ந் தேதி உத்தரவிட்டது.
நிர்மலாதேவி தொடர்பான வழக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு கடந்த 14–ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் உத்தரவு நகல் கிடைக்காததால் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஜாமீன் உத்தரவு ஆவணங்கள் கிடைக்கப்பட்டு நேற்று மகிளா கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. 2 பேரின் வக்கீல் அதனை தாக்கல் செய்தார். இதுதொடர்பான மனுவை மகிளா கோர்ட்டு நீதிபதி (பொறுப்பு) சாய்பிரியா விசாரித்தார். முருகன், கருப்பசாமி ஆகிய இருவருக்கும் தலா ரூ.75 ஆயிரம் சொத்து மதிப்புள்ள 4 நபர்கள் ஜாமீன்தாரர்களாக ஏற்றுக்கொண்டு பிணையில் வெளியே விட அனுமதி வழங்கினார்.
சிறைக்கு வெளியில் இருக்கும் காலத்தில் 2 பேரும் வெளிநாடு செல்ல தடை விதித்தார். சாட்சிகளை கலைக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது, விசாரணையின்போது குறிப்பிட்ட தேதியில் கோர்ட்டில் தவறாமல் ஆஜராகவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொண்டு வக்கீல் மதுரை சிறைக்கு வந்தார். ஆனால் சிறையில் ஆவணங்களை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க இயலவில்லை.
எனவே இன்று(புதன்கிழமை) காலை ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் முருகன், கருப்பசாமி ஆகிய இருவரும் 9 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து இன்று வெளியே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.