பாலக்கோடு அருகே கோவில் திருவிழாவில் கரகம் எடுப்பதில் மோதல்; கிராம மக்கள் சாலைமறியல்


பாலக்கோடு அருகே கோவில் திருவிழாவில் கரகம் எடுப்பதில் மோதல்; கிராம மக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 20 Feb 2019 4:45 AM IST (Updated: 20 Feb 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு அருகே கோவில் திருவிழாவில் கரகம் எடுப்பதில் மோதலையடுத்து ஒரு தரப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் மற்றும் சுற்று வட்டார 12 கிராம மக்கள் ஒன்று கூடி பாலக்கோடு புதூர் பொன் மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்துவது வழக்கம். இந்த திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறுகிறது.

இந்தநிலையில் வாழைத்தோட்டம் கிராமத்தில் கோவில் கரகம் எடுப்பதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஒருதரப்பினர் நேற்று காலை பாலக்கோட்டிலிருந்து பெல்ரம்பட்டி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் சாலைமறியலில் பங்கேற்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் பாலக்கோடு தாசில்தார் வெங்கடேஸ்வரன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்கள், திருவிழாவில் கரகம் எடுப்பதில் தனிப்பட்ட முறையில் செயல்படக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம், ஆதார் கார்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை என அனைத்தையும் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைப்போம், என்று கோஷமிட்டனர்.

தாசில்தார் தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் மேல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதில் சுமுக முடிவு ஏற்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story