ஆத்தூர் அருகே விபத்தில் தொழிலாளி சாவு - பஸ்சை எரித்த வழக்கில் 9 பேர் கைது
ஆத்தூர் அருகே விபத்தில் தொழிலாளி இறந்ததால் தனியார் பஸ்சை தீ வைத்து எரித்தனர். இந்த வழக்கில் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெத்தநாயக்கன்பாளையம்,
ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 32). தொழிலாளி. இவர் கடந்த 17-ந் தேதி மோட்டார் சைக்கிளில் பகடுபட்டு பிரிவு பகுதியில் சென்ற போது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இளையராஜாவின் உறவினர்களும், பொதுமக்களும் ஆத்திரம் அடைந்து, தனியார் பஸ்சை அடித்து நொறுக்கியதுடன், தீ வைத்து எரித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் பஸ் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது.
மேலும் பலியான இளையராஜாவின் உடலுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இது பற்றி அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கருமந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பஸ்சுக்கு தீவைத்தது யார்? என்றும் தீவிர விசாரணை நடத்தியதுடன், சம்பவம் நடந்த போது எடுத்த வீடியோ காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
இந்த நிலையில் பஸ்சை அடித்து நொறுக்கி தீ வைத்ததாக கருமந்துறை பகுதியை சேர்ந்த தமிழரசன் (26), சடையன் (47), சந்தோஷ்குமார் (24), வெங்கடேசன் (38), துரைசாமி (37), தீர்த்தன் (55), கணேசன் (27), கோவிந்தராஜ் (34) மற்றும் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள காட்டுக்கொட்டாய் வேலனூரை சேர்ந்த ஹரிராம் (32) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story