சேலத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்


சேலத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 19 Feb 2019 11:36 PM GMT (Updated: 19 Feb 2019 11:36 PM GMT)

பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு காலதாமதம் செய்யாமல் 4ஜி சேவையை வழங்க வேண்டும், தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும், ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம் வழங்க வேண்டும்.

சேலம்,

பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று முன்தினம் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அதன்படி சேலம் மாவட்டத்திலும் இந்த வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.

நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்க சேலம் மாவட்ட துணை செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். செயலாளர் பாலகுமார், பி.எஸ்.என்.எல். எம்ப்ளாயீஸ் யூனியன் சங்க மாவட்ட தலைவர் விஜயன், செயலாளர் கோபால், மற்றும் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கோரிக்கைகள் குறித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் சேலம் சீரங்கபாளையம் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம், பழைய பஸ்நிலையம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் பி.எஸ்.என்.எல். சேவைகள் பாதிக்கப்பட்டன. வாடிக்கையாளர்களும் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து தேசிய தொலை தொடர்பு ஊழியர்கள் சங்க சேலம் மாவட்ட செயலாளர் பாலகுமார் கூறுகையில், 2-வது நாளாக வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். சேலம் மாவட்டத்தில் உள்ள 229 தொலைபேசி நிலையங்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் சேவை மையங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் பி.எஸ்.என்.எல்.சேவைகள் முற்றிலும் பாதிப்படைந்து உள்ளது.

இன்று (நேற்று) பிற்பகலுக்கு பிறகு பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் சேர்ந்து உள்ள தனியார் செல்போன் சேவையும் பாதிப்படையும். மேலும் வங்கி சேவைகளும் பாதிப்படையும். எனவே அரசு விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வரவேண்டும். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் மட்டும் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு உள்ளனர். எங்களது போராட்டம் தொடர்ந்து நாளையும் (இன்று) நடக்கிறது என்று கூறினார். 

Next Story