மார்த்தாண்டத்தில் பழைய இரும்புக்கடை குடோனில் தீ விபத்து


மார்த்தாண்டத்தில் பழைய இரும்புக்கடை குடோனில்  தீ விபத்து
x
தினத்தந்தி 21 Feb 2019 4:30 AM IST (Updated: 20 Feb 2019 8:27 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் பழைய இரும்புக்கடை குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 2½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

குழித்துறை,

மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் முகமது அலி. இவர் மார்த்தாண்டம் ஜங்‌ஷனில் பழைய இரும்புக்கடை நடத்தி வருகிறார். இங்கு வாங்கும் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பேப்பர் ஆகியவற்றை சேமித்து வைக்கும் குடோன், கொடுங்குளத்தில் உள்ளது. இந்த குடோனில் நேற்று காலை 9.30 மணி அளவில் 3 பெண்கள் பழைய இரும்பு, பிளாஸ்டிக் ஆகிய பொருட்களை தனித்தனியாக பிரித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென்று குடோனின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது. அதை பார்த்ததும், அங்கிருந்த 3 பெண்களும் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அவர்கள் காயமின்றி தப்பினார்கள். அந்த தீ அருகில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு பரவியது. இதனால் குடோனில் இருந்த பழைய பொருட்கள் அனைத்திலும் தீப்பிடித்துக்கொண்டதால், தீ கொழுந்து விட்டு எரிந்தது.

பழைய பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால், அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. உடனே இதுபற்றி குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

எனவே தக்கலை, குலசேகரம் தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் வண்டிகள் வரவழைக்கப்பட்டன. 3 நிலையங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் 2½ மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இந்த குடோனை சுற்றி மரக்கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. குடோனில் காம்பவுண்டு சுவர் உயரமாக இருந்ததாலும், தீயணைப்பு படையினர் தீயை மேலும் பரவவிடாமல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாலும் தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் பொது மக்கள் திரண்டிருந்தனர். எரிந்து நாசமான பொருட்களின் மதிப்பு விவரம் உடனடியாக தெரியவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story