வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்படும் திருப்பதி-ராமேசுவரம் ரெயிலை அனைத்து நாட்களும் இயக்க வேண்டும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு


வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்படும் திருப்பதி-ராமேசுவரம் ரெயிலை அனைத்து நாட்களும் இயக்க வேண்டும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 20 Feb 2019 10:00 PM GMT (Updated: 20 Feb 2019 4:37 PM GMT)

வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்படும் திருப்பதி - ராமேசுவரம் ரெயிலை, அனைத்து நாட்களும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வேலூர்,

வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் வழியாக திருப்பதி, விழுப்புரம், ராமேசுவரம், அரக்கோணம், சென்னை கடற்கரை, கோரக்பூர், புருலியா ஆகிய ஊர்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 16 ரெயில்கள் கண்டோன்மென்ட் வழியாக இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பவுர்ணமி நாட்களில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

திருப்பதி - ராமேசுவரம் ரெயில் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் வழியாக ஞாயிறு, வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகிய கிழமைகளில் இயக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை வழியாக மறுநாள் காலை 8 மணிக்கு ராமேசுவரத்தை சென்றடைகிறது.

அதேபோன்று ராமேசுவரத்தில் இருந்து சனி, திங்கள், வியாழன் ஆகிய கிழமைகளில் இயக்கப்படுகிறது. அங்கிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்துக்கு வருகிறது. திருப்பதி- ராமேசுவரம் ரெயிலில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது.

ஆனால் மற்ற ரெயில்களை போல இந்த ரெயில் தினமும் இயக்கப்படாமல், வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. திருப்பதி, ராமேசுவரத்துக்கு செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்படும் இந்த ரெயிலை வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story