குடிபோதையில் மாணவியின் கையை பிடித்து இழுத்த வாலிபர் பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்


குடிபோதையில் மாணவியின் கையை பிடித்து இழுத்த வாலிபர் பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 20 Feb 2019 11:00 PM GMT (Updated: 20 Feb 2019 7:07 PM GMT)

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் பட்டப்பகலில் குடிபோதையில் மாணவியின் கையை பிடித்து இழுத்த வாலிபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை பழைய பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். நேற்று முன்தினம் மதியம், பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர். தஞ்சை நகரில் உள்ள பள்ளிகளில் அருகில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி தஞ்சையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் நேற்று பள்ளி முடிந்து மற்ற மாணவிகளுடன் வீட்டிற்கு செல்வதற்காக தஞ்சை பழைய பஸ் நிலையம் வந்தார். அங்கு மாணவிகளுடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு குடிபோதையில் ஒரு வாலிபர் வந்தார். அவர் மாணவி அருகில் வந்து நான் உனது தந்தை. நீ எனது மகள் போல இருக்கிறாய் என கூறி கையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் சத்தம் போட்டார். அப்போது அருகில் நின்ற மற்ற மாணவிகளும், அந்த வாலிபர் கடத்தல்காரராக இருக்கலாம் என கருதி சத்தம் போட்டனர்.இதனைப்பார்த்த அருகில் இருந்த மற்ற பயணிகள் அங்கு வந்து அந்த வாலிபருக்கு சரமாரி தர்ம அடி கொடுத்தனர். மேலும் அந்த வாலிபர் போதையில் இருந்ததால் அவரால் நிற்க கூட முடியவில்லை. இதற்கிடைய பழைய பஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்துக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் அங்கு வந்தனர். அப்போது போலீசார் முன்னிலையிலும் பொதுமக்கள் அந்த வாலிபரை அடித்து உதைத்தனர். பின்னர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச்சென்றனர். அங்கு வைத்து விசாரணை நடத்தியதில் அவர் ஒரத்தநாடு தாலுகா நடுவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தனது மகள் போல அந்த சிறுமி இருந்ததாகவும், அதனால் அவரை அழைத்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Next Story