வங்கியில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது


வங்கியில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 Feb 2019 10:30 PM GMT (Updated: 20 Feb 2019 7:44 PM GMT)

தனியார் வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அம்பத்தூர்,

அம்பத்தூர் ஒரகடம் பத்மநாபா தெருவை சேர்ந்தவர் ஹரிஷ்குமார் (வயது 25). இவர், தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக அம்பத்தூரை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இதுபற்றி விசாரிக்கும்படி அம்பத்தூர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் ஹரிஷ்குமாரை அம்பத்தூர் போலீசார் தேடி வந்தனர்.

இதற்கிடையில் சுசித்ரா (25), திவ்யா(27) ஆகிய மேலும் 2 பேர், தங்களுக்கு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக ஹரிஷ்குமார் மீது அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கைது

இந்தநிலையில் தலைமறைவான ஹரிஷ்குமார், கள்ளக்குறிச்சி பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் கராத்தே மாஸ்டராக பணியாற்றி வருவதை அறிந்த அம்பத்தூர் போலீசார், ஹரிஷ்குமாரை கைது செய்து விசாரித்தனர்.

அதில், பிளஸ்-2 வரை படித்து உள்ள ஹரிஷ்குமார், ‘டிப்-டாப்’பாக உடை அணிந்து கொண்டு தன்னை தனியார் வங்கியின் உயர் அதிகாரி என்று கூறி பலரிடம் இதுபோல் தனியார் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் வேலை வாங்கித்தருவதாக பணம் பெற்று மோசடி செய்து உள்ளது தெரிந்தது.

ரூ.30 லட்சம் மோசடி

மேலும் இவர், முகநூல் பக்கங்களில் முதலில் நண்பர்களாக பழகி அவர்களிடம் கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பெற்றுக்கொள்வார். பின்னர் அவர்களிடம், தான் வங்கியில் உயர் அதிகாரியாக இருப்பதாகவும், தனியார் வங்கிகளில் உதவி மேலாளர் பணி வாங்கி தருவதாகவும் கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதுவரை ராஜமாணிக்கம் உள்ளிட்ட 4 பேரிடம் மட்டும் ரூ.30 லட்சம் வரை மோசடி செய்து உள்ளார். இவர் மீது கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே வேலை வாங்கி தருவதாக 10-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இவர் மீது செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்திலும் ஒரு வழக்கு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story