நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் 113 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் பெண் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம்


நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் 113 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் பெண் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம்
x
தினத்தந்தி 21 Feb 2019 4:00 AM IST (Updated: 21 Feb 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நேற்று ஒரே உத்தரவில், 113 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டனர்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். சப்-இன்ஸ்பெக்டர்கள் தொடங்கி, இன்ஸ்பெக்டர்கள், துணை சூப்பிரண்டுகள், சூப்பிரண்டுகள், டி.ஐ.ஜி.க்கள் என்று மாறுதல் பட்டியல் வந்து கொண்டே இருக்கிறது. சென்னையிலும் இந்த மாற்றம் அரங்கேற்றப்பட்டு வருகிறது. சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். இவர் கடந்த 3 மாதங்களில் சந்திக்கும் 3-வது மாறுதல் பட்டியல் இதுவாகும்.

வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனராக பொறுப்பு ஏற்கிறார். ஏற்கனவே சென்னையில் தெற்கு மண்டல இணை கமிஷனராக மகேஷ்வரியும், மேற்கு மண்டல இணை கமிஷனராக விஜயகுமாரியும் பணியாற்றுகிறார்கள். டி.ஐ.ஜி. வனிதா சென்னை வருகை மூலம் சட்டம்-ஒழுங்கு பிரிவில் உள்ள 4 இணை கமிஷனர்களில் 3 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல சென்னையில் இன்ஸ்பெக்டர்கள் நியமனத்திலும் பெண் இன்ஸ்பெக்டர்கள் வழக்கத்தை விட முக்கியத்துவம் பெற்றுள்ளனர்.

ஒரே உத்தரவில் 113 பேர்

கடந்த 18-ந் தேதி அன்று இரவில் சென்னையில் 81 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டனர். நேற்று அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு புதிய உத்தரவு ஒன்றை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பிறப்பித்தார். அந்த ஒரே உத்தரவில் 113 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சென்னை வேப்பேரி இன்ஸ்பெக்டர் வீரக்குமார் கண்ணகிநகர் சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கு மாற்றப்பட்டார். மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வேப்பேரி சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கு புதிய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். வேப்பேரி சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கு முதல் முறையாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவி ஏற்கிறார். வேப்பேரி உதவி கமிஷனர் பதவிக்கும் பெண் போலீஸ் அதிகாரி மகேஷ்வரி ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓட்டேரி சட்டம்-ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டராக வள்ளி பதவி ஏற்கிறார். அலமேலு கோட்டை சட்டம்-ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டராக(2) பொறுப்பு ஏற்கிறார். சமீனா பானு கொரட்டூர் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Next Story