ஆம்பூர் அருகே சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனப்பகுதியில் கூண்டு பொதுமக்கள் நுழைய அதிகாரிகள் தடை


ஆம்பூர் அருகே சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனப்பகுதியில் கூண்டு பொதுமக்கள் நுழைய அதிகாரிகள் தடை
x
தினத்தந்தி 20 Feb 2019 9:30 PM GMT (Updated: 20 Feb 2019 8:07 PM GMT)

ஆம்பூர் அருகே வனப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளதால் ஆடு மேய்ப்பவர்களோ பொதுமக்களோ அந்த பகுதிக்குள் அத்துமீறி செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆம்பூர்,

ஆம்பூர் வனச்சரகத்தில் அபிகிரிபட்டரை, பொன்னப்பல்லி, காட்டுவெங்கடாபுரம், மத்தூர்கொல்லை, மலையாம்பட்டு, மிட்டாளம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. அந்த சிறுத்தை மேற்கண்ட பகுதிகளில் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கருங்கல்குட்டை பகதுசியில் இருந்து வந்த சிறுத்தை அபிகிரிபட்டரையை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான 4 ஆடுகளை கடித்து குதறியது. அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் சிறுத்தையால் பொதுமக்கள், விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி சிறுத்தை கடித்து குதறிய 4 ஆடுகளின் உரிமையாளர் வெங்கடேசன் நிலத்தின் அருகே கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறுத்தையை பிடிக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர். இந்த நிலையில் கூண்டு வைக்கப்பட்ட இடத்தை உதவி வனப்பாதுகாவலர் ராஜ்குமார் பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், “சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டு உள்ள வனப்பகுதிக்குள் அத்துமீறி யாரும் போகக்கூடாது. கால்நடைகள் மேய்ப்போர் அப்பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இப்பகுதியில் சிறுத்தை பிடிபடும் சூழல் உருவாகி உள்ளது. பொதுமக்கள் வனத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.

Next Story