அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நுண்ணீர் பாசன தனியார் நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து


அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நுண்ணீர் பாசன தனியார் நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து
x
தினத்தந்தி 20 Feb 2019 11:00 PM GMT (Updated: 20 Feb 2019 8:10 PM GMT)

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் நுண்ணீர் பாசன 2 தனியார் நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அரியலூர்,

பாசன நீரை சேமிக்க உதவும் நுண்ணீர் பாசனத் திட்டம் தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.

விவசாயிகள் செலுத்த வேண்டிய நுண்ணீர் பாசன அமைப்புகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை தமிழக அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. நுண்ணீர் பாசனத் திட்டம் தமிழ்நாட்டில் 2018-19-ம் ஆண்டில் ரூ.1671.15 கோடி நிதி ஒதுக்கீட்டில், 2.55 லட்சம் எக்டர் பரப்பளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் ரூ.36.52 கோடி நிதி ஒதுக்கீட்டில் 5,770 எக்டர் பரப்பளவில் தோட்டக்கலை மற்றும் வேளாண் பயிர்களில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.32.77 கோடி நிதி ஒதுக்கீட்டில் 6,331 எக்டர் பரப்பளவில் தோட்டக்கலை மற்றும் வேளாண் பயிர்களில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் 41 நுண்ணீர் பாசன நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் “எவர்கீரீன் இரிகேசன்“ மற்றும் “பூர்மா பிளாஸ்ட் பிரைவேட் லிமிடெட்” ஆகிய 2 நுண்ணீர் பாசன தனியார் நிறுவனங்களும் நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு எவ்வித பணிகளையும் மேற்கொள்ளவில்லை. எனவே அந்த நிறுவனங்களுக்கு குறிப்பிடும்படி முன்னேற்றம் காண்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனாலும், அந்த நிறுவனங்கள் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்காத காரணத்தினால் மாநில அளவிலான ஒப்புதல் குழுவின் அனுமதியுடன் அந்த நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் அளிக்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் மூலம் நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் “எவர்கீரீன் இரிகேசன்” மற்றும் “பூர்மா பிளாஸ்ட் பிரைவேட் லிமிடெட்” ஆகிய 2 நிறுவனங்களை அணுக வேண்டாம். இந்த தகவல்களை மாவட்ட கலெக்டர்கள் விஜயலட்சுமி (அரியலூர்), சாந்தா (பெரம்பலூர்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர். 

Next Story