பூண்டி ஏரி இணைப்பு கால்வாய் சீரமைப்பு பணிகள்


பூண்டி ஏரி இணைப்பு கால்வாய் சீரமைப்பு பணிகள்
x
தினத்தந்தி 20 Feb 2019 8:42 PM GMT (Updated: 20 Feb 2019 8:42 PM GMT)

பூண்டி ஏரி இணைப்பு கால்வாய்க்கான சீரமைப்பு பணிகள் தொடங்கியது.

ஊத்துக்கோட்டை,

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த 11-ந் தேதி முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரியின் உயரம் 35 அடியாகும். 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். பூண்டி ஏரியில் கிருஷ்ணா நதிநீர் மற்றும் மழை நீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாயில் தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். இதற்காக இணைப்பு கால்வாய் பகுதியில் இருந்து புழல் ஏரி வரை 25 கிலோமீட்டர் தூரத்துக்கு திறந்தவெளி கால்வாய் உள்ளது.

அதே போல் செம்பரம்பாக்கம் ஏரி வரை கால்வாய் உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாயில் திறந்துவிடப்படும் தண்ணீர் புல்லரம்பாக்கம், தலையஞ்சேரி, ஈக்காடு, தண்ணீர்குளம், சிறுகடல் வழியாக பாய்ந்து செல்கிறது.

சீரமைப்பு பணிகள்

அங்குள்ள மதகு வழியாக புழல் அல்லது செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படு கிறது. இந்த நிலையில் இணைப்பு கால்வாய் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. இந்த கால்வாய்க்கான சீரமைப்பு பணிகள் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகின்றன. கண்டலேறு அணையில் இருந்து தற்போது பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

குறிப்பிட்ட அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்தால் பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாயில் தண்ணீர் திறந்துவிட உள்ளனர். இந்த தண்ணீர் தங்கு தடையின்றி புழல் அல்லது செம்பரம்பாக்கம் ஏரிகளை சென்றடைய ஏதுவாக பூண்டி இணைப்பு கால்வாய் சீரமைப்பு பணிகள் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது.

Next Story