ஈரோட்டில் புதிய குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
ஈரோட்டில் புதிய குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோடு மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வைராபாளையம், வெண்டிபாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள குப்பை கிடங்குகளில் கொட்டப்பட்டு வருகிறது. அங்கு மலைபோல் குப்பை குவிந்து கிடக்கிறது. மேலும், குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் வெளிவரும் புகையால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் கடந்த சில நாட்களாக தீப்பற்றி எரிந்து கொண்டே இருக்கிறது. தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றாலும் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.
இந்த நிலையில் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 2 வார்டுகளுக்கு ஒரு இடத்தில் குப்பை கிடங்கு அமைத்து அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அங்கேயே தரம் பிரித்து தினமும் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் புதிதாக குப்பை கிடங்கு அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
அதன்படி ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதிவாரியம் முதலாம் பகுதியில் உள்ள குடிநீர் நீரேற்று நிலையம் அருகில் புதிய குப்பை கிடங்கு அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்க குழிகள் தோண்டப்பட்டன. மேலும் கட்டுமான பணிகளுக்கு தேவையான மணல், கற்கள் கொட்டப்பட்டு உள்ளன. அங்கு குப்பை கிடங்கு அமைக்க அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேற்று காலை வழக்கம்போல் குப்பை கிடங்கு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த பொதுமக்கள், குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளும், தாலுகா போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் கூறியதாவது:–
ஈரோடு மாநகராட்சி 34–வது வார்டுக்கு உள்பட்ட எங்களது பகுதியில் குடிநீர் நீரேற்று நிலையம் உள்ளது. இதற்கு அருகில் புதிதாக குப்பை கிடங்கு அமைக்கப்படுகிறது. அங்கு குப்பை குவிந்துவிட்டால் துர்நாற்றம் வீசும். இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவார்கள். எனவே குடியிருப்புகள் அதிகமாக உள்ள இடங்களில் குப்பைக்கிடங்கு அமைக்கும் முடிவை கைவிட்டு, வீடுகள் இல்லாத இடங்களில் குப்பைக்கிடங்கு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அதற்கு அதிகாரிகள், ‘‘உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி குப்பைக்கிடங்கு அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. எனவே உங்களுடைய கோரிக்கையை மாநகராட்சி ஆணையாளரிடம் மனுவாக எழுதி கொடுங்கள். அதன்படி பரிசீலனை செய்யப்படும். அதுவரை குப்பைக்கிடங்கு அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்’’, என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.