ரூ.6½ கோடியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் - தம்பிதுரை திறந்து வைத்தனர்


ரூ.6½ கோடியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் - தம்பிதுரை திறந்து வைத்தனர்
x
தினத்தந்தி 20 Feb 2019 11:00 PM GMT (Updated: 20 Feb 2019 8:58 PM GMT)

கரூர் பசுபதிபாளையத்தில் ரூ.6½ கோடியில் கட்டப்பட்ட ரெயில்வே சுரங்கப்பாதையை தமிழக போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் திறந்து வைத்தனர்.

கரூர்,

கரூர் நகரம் வடக்கு பசுபதிபாளையத்தில் ரூ.6.கோடியே 50 லட்சம் மதிப்பில் ரெயில்வே சுரங்கப்பாதை கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கீதா, மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், கரூர் மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் பி.சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜேந்திரன் வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டு ரெயில்வே சுரங்கப்பாதையை திறந்து வைத்தனர்.

தொடர்ந்து விழாவில் அமைச்சா எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது.

இந்த ரெயில்வே சுரங்கப் பாதைக்கு தி.மு.க. ஆட்சியில் பூமி பூஜை போடப்பட்டது. அப்போது மத்தியில் ஆளும் கட்சியாக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்தது. அப்போது தி.மு.க.வும், மத்திய அமைச்சரவையில் இருந்தது. அன்று செய்ய முடியாததை இன்று அம்மாவின் ஆட்சி நிறைவு செய்துள்ளது. வடக்கு பசுபதிபாளையம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.

மேலும் தமிழக முதல்-அமைச்சரிடம் சிறப்பு அனுமதி பெற்று கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குக்கிராமத்திற்கும் தார்சாலை, சிமெண்டு சாலை, தெரு விளக்குகள், கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் பைபாஸ் சாலை வரை ரூ. 21 கோடியே 12 லட்சம் மதிப்பில் புதிய அம்மா சாலை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த பணி நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திறப்பு விழாவில் மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், கரூர் நகர கூட்டுறவு வங்கிதலைவர் எஸ்.திருவிகா, கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கே. கமலக்கண்ணன், கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழயன், கரூர் ஜெ.பேரவை செயலாளர் வி.செல்வராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பொரணி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story