கல்லூரி பட்டமளிப்பு விழா: பெண் கல்வி வீட்டையும், நாட்டையும் பேணிக்காக்கும் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு
பெண் கல்வி வீட்டையும், நாட்டையும் பேணிக்காக்கும் என கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் கூறினார்.
தேவகோட்டை,
தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி தலைவர் லட்சுமணன் செட்டியார் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சேவியர் வரவேற்றார். இந்த விழாவில் கலந்து கொண்டு 250 மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:–
கல்வி வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கிறது. கொடையில் சிறந்தது கல்விக் கொடை. பின்தங்கிய இப்பகுதியில் முதன்முதலில் கல்வி நிறுவனத்தை தந்தவர் அண்ணாமலை செட்டியார். இந்த கல்லூரியில் 60 சதவீதம் பேர் மாணவிகள் என்பதை நான் வரவேற்கிறேன். பெண் கல்வி என்பது வீட்டை மட்டுமல்ல நாட்டையும் பேணிக்காக்கும். மாணவ–மாணவிகள் பெற்றோர் மற்றும் ஆசிரியரை மதித்து நடக்க வேண்டும். அப்போது தான் வாழ்வில் உயர்ந்த நிலையை எட்டலாம்.
கூட்டுக்குடும்பம் சிதையாமல் முதியோர் நலன் பேணுதல் வேண்டும். நரேந்திர தத் என்று பேர் கொண்ட விவேகானந்தரை ராமகிருஷ்ணரிடம் ஆற்றுப்படுத்தியது வில்லியம் ஹேஸ்டிங் என்ற ஆசிரியரே. என் முன்னே ஆசிரியரும், கடவுளும் தோன்றினால் நான் முதலில் ஆசிரியர் காலில் தான் விழுவேன், கடவுளை கற்று தந்தவரே ஆசிரியர் தான் என்றார் கபீர்தாசன். எனவே ஆசிரியர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்.
உலக இலக்கியங்களில் மேலான இலக்கியமாக திருக்குறள் திகழ்கிறது. அதனால்தான் ரஷ்ய அரண்மனையில் வைத்து திருக்குறள் பாதுகாக்கப்படுகிறது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறியது போல கனவு காணுங்கள். அதாவது நிழலாக இல்லாமல் நிஜமாக காணுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்
முன்னதாக பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற உயிர் மேலாண்மை விலங்கியல் துறை மாணவி ஐஸ்வர்யாவிற்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. விழாவில் கல்லூரி செயலாளர் லட்சுமி ஆட்சி, துணைத்தலைவர் சேவுகன் செட்டியார் மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்