விபத்தில் காதலன் இறந்ததால் மனம் உடைந்தார்: விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை


விபத்தில் காதலன் இறந்ததால் மனம் உடைந்தார்: விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 21 Feb 2019 2:50 AM IST (Updated: 21 Feb 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் காதலன் இறந்ததால் மனம் உடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பத்ராவதியில் நடந்து உள்ளது.

சிவமொக்கா,

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியை சேர்ந்தவர் பூஜா(வயது 22). இவர் பெங்களூருவில் வீட்டு வேலை செய்து வந்தார். பூஜாவும் அவரது உறவினரான குடகு மாவட்டம் குசால்நகரை சேர்ந்த முரளி(25) என்பவரும் காதலித்து வந்தனர்.

இவர்களின் திருமணத்திற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பூஜா, முரளிக்கு புதிதாக ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு மடிகேரி அருகே நடந்த விபத்தில் முரளி இறந்தார். தனது காதலன் விபத்தில் இறந்ததால் பூஐா மனம் உடைந்து காணப்பட்டார்.

விஷம் குடித்து தற்கொலை

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து பத்ராவதிக்கு பூஜா வந்தார். மேலும் வீட்டில் உள்ள யாரிடமும் அவர் சரியாக பேசவில்லை. அவர் முரளியை நினைத்து அழுது கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து பூஜா தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பத்ராவதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பூஜாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை பூஐா பரிதாபமாக இறந்து விட்டார். இதுபற்றி அறிந்த போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சோகம்

இதுகுறித்து பத்ராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறாா்கள். விபத்தில் காதலன் இறந்த சோகத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பத்ராவதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story