கார்கலாவில் சட்டவிரோதமாக செயல்பட்ட 4 கல்குவாரிகளுக்கு சீல் கனிமவளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
கார்கலாவில், சட்ட விரோதமாக செயல்பட்ட 4 கல்குவாரிகளுக்கு கனிமவளத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மங்களூரு,
உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகா நந்தலிகே, குந்தியடுக்கா பகுதிகளில் ஏராளமான சட்டவிரோத கல்குவாரிகள் செயல்பட்டு வருவதாகவும், இந்த கல்குவாரிகளில் பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் வெடிகளால் அதிக பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கனிமவளத்துறை அதிகாரி மகாந்தேஷ் தலைமையிலான அதிகாரிகள் நந்தலிகே, குந்தியடுக்கா பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
4 கல்குவாரிகளுக்கு சீல்
இந்த சோதனையின் போது அப்பகுதிகளில் 4 கல்குவாரிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடு்த்து அந்த கல்குவாரிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் கல்குவாரிகளில் வேலை பார்த்து வந்த பீகார், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை அதிகாரிகள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றினார்கள்.
கனிமவளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு நடத்திய விசாரணையில், சீல் வைக்கப்பட்ட 4 கல்குவாரிகளும் மின்சார சப்ளை நிறுத்தப்பட்டு இருந்ததும், கல்குவாரிகளின் உரிமையாளர்கள் மின்சாரத்தை திருடி பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் இந்த கல்குவாரிகளை மூட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்ததும், அதனை மீறி செயல்பட்டு வந்ததும் தெரிந்தது.
இதுகுறித்து கல்குவாரிகளின் உரிமையாளர்கள் மீது கனிமவளத்துறை அதிகாரிகள் கார்கலா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story