கடபா, மூடபித்ரி தாலுகாக்கள் வருகிற 1-ந் தேதி முதல் செயல்பட தொடங்கும் மந்திரி யு.டி.காதர் தகவல்


கடபா, மூடபித்ரி தாலுகாக்கள் வருகிற 1-ந் தேதி முதல் செயல்பட தொடங்கும் மந்திரி யு.டி.காதர் தகவல்
x
தினத்தந்தி 20 Feb 2019 9:32 PM GMT (Updated: 20 Feb 2019 9:32 PM GMT)

கடபா, மூடபித்ரி தாலுகாக்கள் வருகிற 1-ந் தேதி முதல் செயல்பட தொடங்கும் என்று மந்திரி யு.டி.காதர் கூறினார்.

மங்களூரு,

மாநில நகர வளர்ச்சி துறை மந்திரியும், தட்சிண கன்னடா மாவட்ட பொறுப்பு மந்திரியுமான யு.டி.காதர் நேற்று மங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மாநில அரசால் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கடபா, மூடபித்ரி தாலுகாக்கள் வருகிற 1-ந்தேதி முதல் செயல்பட தொடங்கும். புதிய தாலுகாக்களை மாநில வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே தொடங்கி வைக்கிறார்.

இதில் தட்சிண கன்னடா மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள். இதுபோல மங்களூருவில் புதிதாக கட்டப்பட்டு உள்ள லேடிகுசன் அரசு பிரசவ மருத்துவமனை, அரசு கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் ஆகியவை வருகிற 26-ந் தேதி திறந்து வைக்கப்படுகிறது.

பஸ்கள் இயக்கப்பட உள்ளது

முடிப்பு பிளாக் காங்கிரஸ் சார்பில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த மண்டியா வீரர் குருவின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும். நான் புத்தூர், பெல்தங்கடி, பண்ட்வால் தாலுகாவில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிய உள்ளேன்.

சூரத்கல் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை மூட வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது. இதுபற்றி மத்திய-மாநில அரசுகள் முடிவு செய்யும். தொக்கோட்டு-பண்ட்வால் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்கு நளின்குமார் கட்டீல் எம்.பி.யின் அலட்சியமே காரணம். இரவு-பகல் பாராமல் செய்தால் இந்த பாலம் கட்டும் பணி துரிதமாக முடியும்.

மாநில அரசை குறைகூறி வரும் நளின்குமார் கட்டீல் முதலில் அபிவிருத்தி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். மணிப்பால்-தர்மஸ்தாலா, மணிப்பால்-சுப்பிரமணியா, மணிப்பால்-புத்தூர் இடையே கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அரசு பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story