கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் காவிரித்தாய் சிலை அமைக்கப்படுவது உறுதி முதல்-மந்திரி குமாரசாமி திட்டவட்டம்


கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் காவிரித்தாய் சிலை அமைக்கப்படுவது உறுதி முதல்-மந்திரி குமாரசாமி திட்டவட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2019 9:37 PM GMT (Updated: 20 Feb 2019 9:37 PM GMT)

எந்த பிரச்சினை எழுந்தாலும் அவற்றை எதிர்கொண்டு கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் காவிரித்தாய் சிலை அமைக்கப்படுவது உறுதி என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

மண்டியா,

மண்டியா மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.602 கோடி செலவில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக ரூ.212 கோடி செலவில் 10 ஆயிரம் இடங்களில் மோட்டார்கள் மூலம் பாசன வசதி அமைக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மண்டியா மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் மந்திரிகள் சி.எஸ்.புட்டராஜு, டி.சி.தம்மண்ணா, சா.ரா.மகேஷ், ஜி.டி.தேவேகவுடா, சிவராமேகவுடா எம்.பி., கலெக்டர் மஞ்சுஸ்ரீ மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கனவு குழந்தை திட்டம்

மண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள, கர்நாடகத்தில் இருக்கும் அணைகளில் முக்கிய அணையாக கருதப்படும் கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணைப் பகுதியில் ரூ.1,200 கோடி செலவில் காவிரித்தாய் சிலை மற்றும் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படுவது உறுதி. இதில் எந்த பிரச்சினை எழுந்தாலும் அவற்றை எல்லாம் எதிர்கொண்டு கண்டிப்பாக காவிரித்தாய் சிலையும், பொழுதுபோக்கு பூங்காவும் அமைக்கப்படும். இந்த திட்டம் என்னுடைய ‘கனவு குழந்தை’ திட்டமாகும்.

நான் இந்த திட்டம் நல்லபடியாக நிறைவேறவும், இந்த திட்டத்தை எதிர்ப்பவர்களே மனம் மாறி இதற்கு ஆதரவு தெரிவித்திடவும் கடவுளை வேண்டுவேன். இந்த திட்டத்தினால் கே.ஆர்.எஸ். அணைக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. மேலும் இந்த திட்டத்திற்காக விவசாயிகள் யாரிடமும் இருந்து அரசு நிலங்களை கையகப்படுத்தாது.

சந்தேகங்களை தீர்த்து வைப்பேன்

இந்த திட்டத்தை அரசே முன்னின்று நிறைவேற்றும். இந்த திட்டத்தை எதிர்ப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராக உள்ளேன். அவர்களின் சந்தேகங்களையும் நான் தீர்த்து வைப்பேன்.

இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

Next Story