மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும் சுங்கத்துறை அதிகாரி பேச்சு


மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும் சுங்கத்துறை அதிகாரி பேச்சு
x
தினத்தந்தி 20 Feb 2019 10:15 PM GMT (Updated: 20 Feb 2019 10:07 PM GMT)

மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும் என கல்லூரியில் நடந்த விழாவில் சுங்கத்துறை அதிகாரி பேசினார்.

மதுரை,

மதுரையை அடுத்துள்ள சேது என்ஜினீயரிங் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக மதுரை சுங்கப்புலனாய்வு துறை உதவி கமி‌ஷனர் டாக்டர் வெங்கேடஷ்பாபு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

போதைப்பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு என்ன என்பதை அறியாமல் பலரும் அதற்கு அடிமையாகி வருகின்றனர். போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்பாடும் பாதிப்புகளை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். இதனை விழிப்புணர்வுகள் மூலமே தெரியப்படுத்தமுடியும். மாணவர்கள் போதைக்கு அடிமையாகமால் இருப்பதோடு, அதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும். மேலும் போதைப்பொருளால் ஏற்படும் உடல்பாதிப்பு, குற்றங்கள் உள்ளிட்டவைகளை அறிந்து கொள்ள வேண்டும். உலக அளவில் இந்தியாவில் தான் அதிக இளைஞர்கள் இருக்கின்றனர். இந்த இளைஞர்கள் போதைக்கு அடிமையாகிவிடாமல் இருக்க வேண்டும். அப்போது தான் இந்தியா முன்னேற்ற பாதையில் செல்ல முடியும்.

தற்போதுள்ள காலகட்டத்தில், மருந்து கடைகளில் கூட போதை மருந்துகள் கிடைக்கிறது. எளிதில் கிடைக்கிறது என்பதற்காக அதனை பயன்படுத்திவிடக்கூடாது. அதனால் ஏற்படும் பாதிப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும். சிறு, சிறு நோய்களுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை சரியான அளவிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மருந்து சாப்பிட்டால் அது கூட ஒருவகை போதை தான். மாணவிகள் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது, குளிர்பானங்கள், உணவு பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதுபோன்ற பொருட்களில் போதைப்பொருட்கள் கலந்திருப்பின், அதனை சாப்பிடுவதன் மூலம் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, சிறப்பு விருந்தினருக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் முகமது ஜலீல் நினைவு பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், கல்லூரி நிர்வாகிகள் எஸ்.எம்.சீனி முகைதீன், சீனி முகமது அலியார், கல்லூரி முதல்வர் செந்தில்குமார், டீன் ஜான்சிராணி உள்ளிட்ட முதலாம் ஆண்டு மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story