வணிக வளாகம், குடியிருப்பு, ஓட்டலுக்குள் புகுந்து மக்களை பயமுறுத்திய சிறுத்தைப்புலி 6 மணி நேரத்துக்கு பிறகு பிடிபட்டது
வணிக வளாகம், குடியிருப்பு மற்றும் ஓட்டலுக்குள் புகுந்து மக்களை பயமுறுத்திய சிறுத்தைப்புலி 6 மணி நேரத்துக்கு பிறகு பிடிபட்டது.
தானே,
தானேயில் நேற்று அதிகாலை சிறுத்தைப்புலி ஒன்று குடியிருப்பு பகுதியில் புகுந்து விட்டது. அதிகாலை 5.30 மணியளவில் அந்த சிறுத்தைப்புலி சம்தா நகரில் உள்ள கோரம் என்ற வணிக வளாக பகுதியில் சுற்றி கொண்டி ருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீஸ் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசாரும், வனத்துறையினரும் அங்கு விரைந்து வந்தனர். அங்கு சிறுத்தைப்புலியை 3 மணி நேரம் சல்லடை போட்டு தேடினர். ஆனால் சிறுத்தைப்புலியை கண்டு பிடிக்க முடியவில்லை.
ஆனால் அந்த சிறுத்தைப்புலி யாருடைய கண்ணிலும் சிக்காமல் அங்கிருந்து நைசாக தப்பி சென்று விட்டது. வணிக வளாக சுற்றுச்சுவரில் ஏறி குதித்து ஓடியிருக்கும் என கருதப்பட்டது.
பிடிபட்டது
இதையடுத்து அந்த சிறுத்தைப்புலி அங்குள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடம் மற்றும் ஓட்டல் வளாகத்திலும் அடுத்தடுத்து தென்பட்டது.
உடனடியாக வனத்துறையினர் மற்றும் போலீசார் அங்கு சென்று தேடினர். அப்போது, ஓட்டலின் கீழ்தள பகுதியில் பதுங்கியிருந்த அந்த சிறுத்தைப்புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர்.
இதையடுத்து காலை 11.50 மணி அளவில் சிறுத்தைப்புலி சுருண்டு விழுந்தது. சுமார் 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிறுத்தைப்புலி பிடிபட்டது. மயங்கி கிடந்த சிறுத்தைப்புலியை வனத்துறையினர் அலாக்காக தூக்கி சென்றனர்.
பின்னர் கூண்டில் அடைத்து வாகனத்தில் ஏற்றினர். இதையடுத்து அந்த சிறுத்தைப்புலி சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் விடப்பட்டது.
பொதுமக்கள் நிம்மதி
முன்னதாக சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் தானே நகரில் நேற்று அதிகாலையில் கண்விழித்தது முதல் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். சிறுத்தைப்புலி பிடிபட்டதா? என்பதை அறிய மிகுந்த ஆர்வம் காட்டினர்.
வணிக வளாகத்தில் அதிகாலை நேரத்தில் யாரும் இல்லை. ஆனால் ஓட்டல் மற்றும் குடியிருப்பில் இருந்தவர்கள் சிறுத்தைப்புலி புகுந்ததால் பதற்றம் அடைந்தனர். அது பிடிபட்ட பிறகே நிம்மதி பெருமூச்சு விட்ட னர்.
தானே பகுதியையொட்டி உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்கா வனப்பகுதியில் இருந்து சிறுத்தைப்புலி ஊருக்குள் புகுந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
Related Tags :
Next Story