ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளி நுரையீரலில் இருந்த கத்தி துண்டு அகற்றம்


ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளி நுரையீரலில் இருந்த கத்தி துண்டு அகற்றம்
x
தினத்தந்தி 21 Feb 2019 12:13 AM GMT (Updated: 21 Feb 2019 12:13 AM GMT)

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளி நுரையீரலில் இருந்த கத்தி துண்டை அகற்றி டாக்டர்கள் சாதனை படைத்தனர்.

நெல்லை,

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே உள்ள பொன்னார்குளத்தை சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது 36), அச்சக தொழிலாளி. கடந்த மாதம் முன்விரோதம் காரணமாக இவரை சிலர் முதுகு பகுதியில் கத்தியால் குத்தினர். 8 சென்டி மீட்டர் நீளமுள்ள அந்த கத்தி அவரது நுரையீரலில் குத்தியது. இதில் கத்தி உடைந்து ஒரு துண்டு நுரையீரலில் சிக்கிக் கொண்டது.

அவர் உடனடியாக சிகிச்சைக்காக கன்னியாகுமரியில் உள்ள ஒரு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பாண்டித்துரையை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவருக்கு ஸ்கேன், ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஸ்கேனில் அவருடைய நுரையீரலில் கத்தி துண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு கடந்த 6-ந் தேதி திறந்த மார்பக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருதய துறை தலைவர் மார்வின் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து கத்தி துண்டை வெற்றிகரமாக அகற்றினர். இந்த அறுவை சிகிச்சை சுமார் 2 மணி நேரம் நடந்தது.

இதுகுறித்து நெல்லை அரசு ஆஸ்பத்திரி டீன் கண்ணன் கூறியதாவது:-

உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பாண்டித்துரையின் நுரையீரலில் இருந்த கத்தி துண்டை டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர். தற்போது அவர் நலமாக உள்ளார். இந்த அறுவை சிகிச்சை தமிழக முதல்-அமைச்சரின் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தில் செய்யப்பட்டது. இந்த சிகிச்சையை தனியார் ஆஸ்பத்திரிகளில் செய்தால் ரூ.3 லட்சம் வரை செலவாகும். இங்கு அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது. விரைவில் அவர் வீடு திரும்புவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் ரேவதி பாலன், உதவி கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், இருதய துறை தலைவர் மார்வின், சிகிச்சை பெற்ற பாண்டித்துரை மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர். 

Next Story