நெல்லையில், சீர்மரபினர் பெயர் மாற்றம் குறித்து கருத்து கேட்பு கூட்டம்


நெல்லையில், சீர்மரபினர் பெயர் மாற்றம் குறித்து கருத்து கேட்பு கூட்டம்
x
தினத்தந்தி 21 Feb 2019 4:15 AM IST (Updated: 21 Feb 2019 5:43 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் சீர்மரபினர் பெயர் மாற்றம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.

நெல்லை, 

தமிழகத்தில் சீர்மரபினர் வகுப்பினரை சீர்மரபினர் பழங்குடியினர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் முதன்மை செயலாளர் அதுல்யா மிஸ்ரா தலைமையில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை இயக்குனர் சம்பத், வருவாய்த்துறை இணை ஆணையாளர் லட்சுமி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் நெல்லை மாவட்டத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள், நாங்குநேரி அருகே உள்ள பூலம் கிராமத்து பகுதி மக்களிடம் கருத்து கேட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர், பழமையான சிறைச்சாலையுடன் கூடிய போலீஸ் நிலைய கட்டிடத்தை பார்வையிட்டனர்.

பின்னர் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அதுல்யா மிஸ்ரா தலைமையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் ஷில்பா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

கூட்டத்துக்கு பிறகு முதன்மை செயலாளர் அதுல்யா மிஸ்ரா நிருபர்களிடம் கூறியதாவது:-

சீர்மரபினருக்கு ஒவ்வொரு மாவட்டத்தில் டி.என்.டி., டி.என்.சி. என வெவ்வேறு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு வெவ்வேறு விதமாக சான்றிதழ் வழங்க முடியாது. இதுதொடர்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்தோம். அங்குள்ள சீர்மரபினர் மக்களையும், சங்க நிர்வாகிகளையும் சந்தித்து கருத்து கேட்டோம்.

சீர்மரபினர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குற்றப்பழங்குடியினர் என இருந்துள்ளனர். பின்னர் சீர்மரபினர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதுதொடர்பான வழக்கு கோர்ட்டிலும் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மாரிமுத்து மற்றும் மறவர் கூட்டமைப்பு சங்கம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், தேவர் நலவாழ்வு நலச்சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Next Story