நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை கமல்ஹாசன் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை கமல்ஹாசன் பேட்டி
x
தினத்தந்தி 22 Feb 2019 4:45 AM IST (Updated: 21 Feb 2019 8:28 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கமல்ஹாசன் கூறினார்.

செம்பட்டு,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் கடந்த ஒரு வருடமாக ஏராளமான மக்கள் நல பணிகளை, கட்சி வளர்ச்சி பணிகளை செய்து உள்ளோம். கிராமங்களை தத்தெடுத்து உதவிகள் செய்து இருக்கிறோம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிராம சபை கூட்டம் நடத்தி உதவினோம்.


நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நலனை மையப்படுத்தியே எங்களது பிரசாரம் இருக்கும். சிலர் கட்டுக்கட்டாக கொள்கை புத்தகங்களை வெளியிட்டு, கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு அதன் மீதேறி மிதித்து நின்று கூட்டணி பேசுகிறார்கள். மக்கள் நலன் என்பது தான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூலதனம். எனவே மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் சத்தியம் செய்து கொடுத்தால் பேச்சுவார்த்தை நடத்துவோம். 3–வது அணி அமையவும் வாய்ப்பு உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வருகிற 24–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு பின்னர் படிப்படியாக வெளியிடப்படும். கல்வி, வயது போன்ற தகுதிகளின் அடிப்படையில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.

தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க. என இரண்டு கட்சிகள் அமைக்கும் மெகா கூட்டணிகளை தாண்டி மக்கள் நீதி மய்யம் வெற்றி பெற முடியுமா? என கேட்கிறீர்கள். எனது பெயரை நான் கூறும்போது மிஸ்டர் கமல்ஹாசன் என்று சொல்லக்கூடாது. நீங்கள் சொல்லலாம். அதேபோல் தான் கூட்டணி அமைப்பவர்களே மெகா கூட்டணி என்று கூறிக்கொள்ளக்கூடாது. மக்கள் தான் மெகா கூட்டணி என சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story