புதுக்கோட்டை காந்திநகரில் புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


புதுக்கோட்டை காந்திநகரில் புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Feb 2019 4:30 AM IST (Updated: 21 Feb 2019 9:04 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை காந்திநகரில் புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 16–ந் தேதி கஜா புயல் தாக்கியது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள், மரங்கள் போன்றவை சாய்ந்தன. இதேபோல குடிசை, ஓட்டுவீடுகள் போன்றவையும் சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து தற்போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில், புயல் நிவாரண பொருட்களும், தென்னை மரங்கள் போன்ற மரங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பயிர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது வங்கி கணக்கில் நிவாரண தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை காந்திநகர் 7–ம் வீதியில் பாதிக்கப்பட்டு உள்ள வீடுகளை கணக்கெடுத்து சென்ற அதிகாரிகள், உங்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என கூறி சென்றனர். ஆனால் இதுநாள் வரை காந்திநகர் 7–ம் வீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புயல் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகை வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.


இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகை வழங்காததை கண்டித்து புதுக்கோட்டை–ஆலங்குடி சாலையில் காந்திநகர் பகுதியில் சாலையின் நடுவே மரத்துண்டுகளை வைத்து தடுப்புகளை அமைத்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை–ஆலங்குடி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஏற்கனவே காந்திநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 4–ந் தேதி மற்றும் 19–ந் தேதி நிவாரணம் வழங்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story