பெருந்துறை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல் ரோட்டில் விழுந்த மளிகை கடைக்காரர் லாரி சக்கரத்தில் சிக்கி சாவு 2 பேர் படுகாயம்


பெருந்துறை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல் ரோட்டில் விழுந்த மளிகை கடைக்காரர் லாரி சக்கரத்தில் சிக்கி சாவு 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 21 Feb 2019 11:00 PM GMT (Updated: 21 Feb 2019 6:52 PM GMT)

பெருந்துறை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் ரோட்டில் விழுந்த மளிகை கடைக்காரர் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

பெருந்துறை,

தூத்துக்குடி மாவட்டம் வேப்பங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார் (வயது 58). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பழைய பஸ் நிலையம் எதிரில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார். பெருந்துறை வி.வி.சி. நகரை சேர்ந்தவர் ஜோசப். கருவாடு வியாபாரி. சுகுமாரும், ஜோசப்பும் நண்பர்கள் ஆவர்.

இவர்கள் 2 பேரும் காஞ்சிக்கோவில் சென்று விட்டு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பெருந்துறை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை ஜோசப் ஓட்டினார். சுகுமார் பின்னால் அமர்ந்து இருந்தார். பெருந்துறை அருகே திருவேங்கடம்பாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே வந்த போது, எதிரில் பெருந்துறை ஜீவா நகர் பகுதியை சேர்ந்த பிரபாகர் (23) என்பவர் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் ரோட்டில் விழுந்து படுகாயம் அடைந்தனர். அப்போது பெருந்துறையில் இருந்து காஞ்சிக்கோவில் நோக்கி சென்ற லாரி சுகுமார் மீது ஏறி இறங்கியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கிய சுகுமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். விபத்து ஏற்பட்டதும் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

இதை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் படுகாயம் அடைந்த ஜோசப், பிரபாகர் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கிடையே தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த பெருந்துறை போலீசார் சுகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள். இறந்த சுகுமாருக்கு அம்மாசிக்கனி (50) என்ற மனைவியும், ரமேஷ்(35) என்ற மகனும், லதா(30) என்ற மகளும் உள்ளனர். அவரது உடலை பார்த்து மனைவி, மகன், மகள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Next Story