சாமி ஊர்வலத்தின்போது தகராறு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது தாக்குதல் 3 பேர் கைது


சாமி ஊர்வலத்தின்போது தகராறு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது தாக்குதல் 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 Feb 2019 10:15 PM GMT (Updated: 21 Feb 2019 7:33 PM GMT)

திருவெண்காடு அருகே சாமி ஊர்வலத்தின்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்காடு,

திருவெண்காடு அருகே சின்னபெருந்தோட்டம் கிராமத்தில் உள்ள கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் நேற்று முன்தினம் மாசிமக உற்சவத்தையொட்டி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சாமி வீதிஉலா காட்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிலர் சாமி ஊர்வலத்தின்போது பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தகாத செயல்களில் ஈடுபட்டனர்.

இதனை அதே ஊரை சேர்ந்த கணபதி மகன் கமால் என்கிற செந்தில்குமார் (வயது 30) என்பவர் தட்டி கேட்டார். பின்னர் அவர் அங்கிருந்து சென்றார். இதனை தொடர்ந்து சாமி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட தகராறு காரணமாக அதே பகுதியை சேர்ந்த வைரம் மகன் கவியரசன் (21), குணசேகரன் மகன் வினோத் (21), விஸ்வநாதன் மகன் விஜய் (21) உள்ளிட்டோர், செந்தில்குமார் வீட்டுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து செந்தில்குமார் மற்றும் அவரது தாய், மனைவி உள்பட 3 பேரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செந்தில்குமார் திருவெண்காடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவியரசன், வினோத், விஜய் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Next Story