வெயில் தாக்கத்தால் பெரம்பலூர் மக்கள் அவதி


வெயில் தாக்கத்தால் பெரம்பலூர் மக்கள் அவதி
x
தினத்தந்தி 22 Feb 2019 4:00 AM IST (Updated: 22 Feb 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

வெயில் தாக்கத்தால் பெரம்பலூர் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்தாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டதே என்றே கூறலாம். அந்த அளவிற்கு பகல் நேரத்தில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்து பலர் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் சாலையில் நடந்து செல்வோர்கள் குடை பிடித்தபடியும், தலையில் துணியை போட்டுக்கொண்டும், பெண்கள் தங்களது துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டு சென்று வருகின்றனர். சாலையில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர்.

இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கூலிங்கிளாஸ் அணிந்து செல்கின்றனர். இந்த வெயில் கொடுமையால் ஏற்படும் தாகத்தை தீர்க்க பொதுமக்கள் பழச்சாறு, கரும்புச்சாறு, நுங்கு, தர்ப்பூசணி, இளநீர், முலாம் பழச்சாறு, மோர், கூழ் போன்றவற்றை கடைகளில் வாங்கி பருகுகின்றனர். இதனால் அந்த கடைகளில் கூட்டம் அலைமோதி, விற்பனையும் சூடுபிடித்துள்ளது. பெரம்பலூர் மாவட்ட பொதுமக்களால் இந்த வெயிலை சமாளிக்க முடியவில்லை. அக்னி நட்சத்திரம் என்கிற கத்தரி வெயில் மே மாதம் 4-ந் தேதி தொடங்க இருக்கிறது. அந்த வெயிலை எவ்வாறு சமாளிக்கப்போகிறோம் என பொதுமக்கள் தற்போதே புலம்பி வருகின்றனர். 

Next Story