வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என விண்ணப்பம் கொடுக்க கரூர் நகராட்சி அலுவலகத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்


வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என விண்ணப்பம் கொடுக்க கரூர் நகராட்சி அலுவலகத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2019 4:30 AM IST (Updated: 22 Feb 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு அறிவித்த ரூ.2,000 நிதியை பெறும் பொருட்டு, வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என விண்ணப்பம் கொடுக்க கரூர் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

கரூர்,

ஏழைதொழிலாளர்கள் உள்பட வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தலா ரூ.2,000 நிதிஉதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து ரேஷன் கார்டில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவோரது புள்ளிவிவரத்தின் அடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் குறித்த விவரம் எடுக்கப்பட்டது. எனினும் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பது உள்ளிட்டவற்றின் காரணமாக, அரசு அதிகாரிகள் குழுவினர் நேரடியாக மக்களை சந்தித்தும் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மக்களும் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை அரசு அலுவலகத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.

அந்த வகையில் கரூர் நகராட்சி அலுவலகத்தில், தமிழக அரசின் ரூ.2,000 நிதியை பெறும் வகையில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர் களுக்கான விண்ணப்பத்தினை அளிக்க மக்கள் ஒரே நேரத்தில் அதிகளவில் திரண்டதால் அங்கு கூட்டம் அலைமோதியபடி இருந்தது. நகராட்சி உதவி பொறியாளர் நக்கீரன் உள்பட அதிகாரிகள், அந்த விண்ணப்பங்களை சரிபார்த்து வாங்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். வங்கி கணக்கு புத்தகம், ஆதார்கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றின் நகல்களுடன் விண்ணப்பங்களை சேர்த்து அளித்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்ட போது தெரிவிக்கையில், அரசு உத்தரவிட்டதன் பேரில் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று வருகிறோம். தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் வீடுகளுக்கு சென்று களஆய்வு மேற்கொண்டு ஆய்வு செய்யப் படும். மேலும் அரசு புள்ளிவிவரப்படி கரூர் மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் விவரத்தை வைத்து ஆய்வு செய்து உரிய பயனாளிகளுக்கு நிதி வழங்க ஆவன செய்யப்படும் என்று தெரிவித்தனர். இதே போன்று குளித்தலை நகராட்சி அலுவலகம் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை அளிக்க அதிகளவு மக்கள் வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். 

Next Story