நாடாளுமன்ற தேர்தலை போராக கருதுங்கள்: தமிழர்களை மதிக்கின்ற மத்திய அரசு அமைய வேண்டும் கனிமொழி எம்.பி. பேச்சு


நாடாளுமன்ற தேர்தலை போராக கருதுங்கள்: தமிழர்களை மதிக்கின்ற மத்திய அரசு அமைய வேண்டும் கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 22 Feb 2019 3:59 AM IST (Updated: 22 Feb 2019 4:06 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலை போராக கருதுங்கள். தமிழர்களை மதிக்கின்ற மத்திய அரசு அமைய வேண்டும் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

ஆறுமுகநேரி,

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கோமான்புதூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வாடகை கட்டிடத்தில் செயல்படுகிறது. இதையடுத்து கோமான்புதூர் மொட்டையார் பள்ளிவாசல் வளாகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு, கனிமொழி எம்.பி. தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அங்கு புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று காலையில் நடந்தது.

தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கனிமொழி எம்.பி. புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி, கல்வெட்டை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

கலைஞர் கருணாநிதி தனது சொந்த ஊரான திருக்குவளைக்கு செல்லும்போது ஏற்படும் மகிழ்ச்சியைப் போன்று, காயல்பட்டினத்துக்கு செல்லும் போதும் மகிழ்ச்சி ஏற்படுவதாக கூறுவார். அவரது மகளான நான் உங்களைத் தேடி வந்துள்ளேன். எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் பல ஊர்களில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன். இதற்காக அனைவரும் என்னை பாராட்டினார்கள். ஆனால் இது பாராட்டுக்கு உரியது அல்ல. இது எனது கடமை. இதனை எனது ஊராக நினைத்துதான் நிதி ஒதுக்கீடு செய்தேன்.

கலைஞர் கருணாநிதியிடம் நீங்கள் வைத்த அன்பும், பாசமும், கலைஞர் உங்கள் மீது வைத்த அன்பும், பாசமும் அறிவேன். அதேபோன்று உங்கள் மீது என்றும் மாறாத அன்பும், பாசமும் வைத்துள்ளேன்.

ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளின்கீழ் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு, மக்களை அச்சுறுத்தி, அனைத்து துறைகளையும் காவி மயமாக்க நினைக்கிறது. இதனால் பொதுமக்கள் தங்களது எதிர்காலம் குறித்து நம்பிக்கையிழந்து வாழ்கின்றனர். எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலை போராட்டமாக எண்ணாமல், போராக கருதுங்கள். மத்தியில் தமிழர்களையும், சிறுபான்மை மக்களையும் மதித்து அரவணைத்து செல்லக்கூடிய அரசு அமைய வேண்டும்.

உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்வதற்கும், திரைப்பட விழாக்களில் பங்கு பெறுவதற்கும்கூட பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரம் உள்ளது. ஆனால் தனது வீட்டுக்கு எதிரே போராடும் விவசாயிகளை சந்திப்பதற்கு அவருக்கு நேரம் இல்லை. சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க., பா.ஜ.க.வின் ‘பி’ அணியாக இரட்டை வேடம் போடுகிறது. அவர்களின் சாயம் வெளுத்து விட்டது. மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடாது. இதற்கு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும். இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

விழாவில் மைதீன்கான் எம்.எல்.ஏ., பள்ளிவாசல் தலைவர் சேரா முதலியார் சாகிப், செயலாளர் செய்யது அலி, முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் அபுல் ஹசன் கலாமி, செயலாளர் வாவு சுலைமான், பிரதிநிதி அமானுல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப், மாநில துணை செயலாளர் இப்ராஹிம் மக்கி, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, மாவட்ட துணை செயலாளர் காதர், நகர செயலாளர் முத்து முகமது, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுகு, ஆதி தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கனிமொழி எம்.பி. கோமான்புதூருக்கு வந்தபோது, வீட்டின் மாடிகளில் நின்ற பெண்கள் மலர் தூவி அவரை வரவேற்றனர். பின்னர் அவர், தீவுத்தெரு, கீழலட்சுமிபுரத்தில் கட்சி கொடியேற்றினார். காயல்பட்டினம் நகரசபை அலுவலகம் எதிரே உள்ள வீட்டின் வளாகத்தில் கனிமொழி எம்.பி. பெண்களிடம் கலந்துரையாடி, குறைகளை கேட்டறிந்தார்.

முன்னதாக திருச்செந்தூர் அமலிநகரில் கனிமொழி எம்.பி. தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர், ஆலந்தலையில் ரூ.25 லட்சம் செலவில் மீன்வலை பராமரிப்பு கூடம் மற்றும் ரூ.10 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் உடன்குடி அருகே தண்டுபத்தில் நடந்த தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார். தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story