பரமத்திவேலூர் அருகே விவசாயி கொலை: செல்போன் கடை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு


பரமத்திவேலூர் அருகே விவசாயி கொலை: செல்போன் கடை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 23 Feb 2019 3:15 AM IST (Updated: 23 Feb 2019 12:14 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் அருகே விவசாய நிலத்திற்கான பாதை பிரச்சினையில் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் செல்போன் கடை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் கூடுதல் மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 47). விவசாயி. இவருக்கும் அருகே உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளரான மாரப்பனின் குடும்பத்தினருக்கும் இடையே பாதை பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி மாரப்பனின் மகன் அன்பழகன் (30) மற்றும் மனைவி ராசம்மாள் (50) ஆகியோர் பிரச்சினைக்கு உரிய பாதையில் லாரியில் மரவள்ளி கிழங்கை கொண்டு செல்ல முற்பட்டனர். அப்போது அவர்களுக்கும், பாலசுப்பிரமணியத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அன்பழகன், பாலசுப்பிரமணியத்தை களைக்கொத்தியால் அடித்து கொலை செய்தார்.

இது தொடர்பாக அன்பழகன் மற்றும் அவரது தாயார் ராசம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து பரமத்திவேலூர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சி.மா.சிவக்குமார் வாதாடி வந்தார்.

இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. விவசாயி பாலசுப்பிரமணியத்தை அடித்து கொலை செய்த அன்பழகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நாமக்கல் கூடுதல் மாவட்ட நீதிபதி தனசேகரன் தீர்ப்பு அளித்தார். ராசம்மாளை விடுவித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து அன்பழகனை கோவை சிறைக்கு அழைத்து செல்ல போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். விவசாயி அன்பழகன் பாண்டமங்கலத்தில் செல்போன் கடை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story