அம்பை தாலுகா அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை குடிநீர் வழங்க கோரிக்கை


அம்பை தாலுகா அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை குடிநீர் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 23 Feb 2019 3:45 AM IST (Updated: 23 Feb 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வழங்க கோரி அம்பை தாலுகா அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பை,

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ளது பொன்மாநகர். இந்த பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் ஏராளமான பொதுமக்கள் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.

நேற்று அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காலிக்குடங்களுடன் அம்பை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், பஞ்சாயத்து சார்பில் அமைக்கப்பட்டு இருந்த குடிநீர் இணைப்பு தாசில்தாரின் தூண்டுதலின் பேரில் தூண்டிக்கப்பட்டதாகவும் புகார் கூறினர்.

இதுகுறித்து தகவலறிந்த அம்பை தாசில்தார் ராஜேஸ்வரி சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், அரசு கால்நடைத்துறை மந்தை புறம்போக்கு பகுதியில் ஆக்கிரமித்து வசித்து வருபவர்களுக்கு, அரசு சார்பில் உரிய இடம் கொடுக்கப்படும். எனவே இப்போது இருக்கும் இடத்தை காலி செய்ய வேண்டும். மேலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இடத்தை காலி செய்துவிட்டு வேறு பகுதிக்கு சென்றால், அவர்களிடம் உரிய விசாரணை நடத்தி அரசின் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அப்போது பெண்கள், எங்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை இந்த பகுதியிலேயே வசித்து கொள்கிறோம் என்று கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story