பெண்ணாடம் அருகே, சம்பளம் வழங்கக்கோரி தனியார் சர்க்கரை ஆலை ஊழியர்கள் சாலை மறியல்


பெண்ணாடம் அருகே, சம்பளம் வழங்கக்கோரி தனியார் சர்க்கரை ஆலை ஊழியர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Feb 2019 10:45 PM GMT (Updated: 22 Feb 2019 9:48 PM GMT)

பெண்ணாடம் அருகே சம்பளம் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 51 தனியார் சர்க்கரை ஆலை ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணாடம், 

பெண்ணாடம் அடுத்த இறையூரில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த சர்க்கரை ஆலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் சர்க்கரை ஆலையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் 2017-18-ம் ஆண்டுக்கான போனஸ் தொகையும் வழங்கப்படவில்லை என தெரிகிறது.

சம்பளம் மற்றும் போனஸ் தொகை வழங்கக் கோரி ஊழியர்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., சமூக சமத்துவப்படை, கூட்டுக்குழு, பணியாளர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் திட்டக்குடி-விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் இறையூர் பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவலறிந்த பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகுமாறு கூறினார். ஆனால் ஊழியர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 51 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். ஊழியர்களின் மறியல் போராட்டத்தால் திட்டக்குடி-விருத்தாசலம் தேசிய நெடுஞ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story