நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு
x
தினத்தந்தி 23 Feb 2019 4:45 AM IST (Updated: 23 Feb 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சி பகுதியில் தினசரி குடிநீர் சீராக வினியோகம் செய்ய ரூ.52 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக குழாய் மற்றும் அதிக விசைத்திறனுடன் கூடிய மின் மோட்டார்கள் அமைக்கவும், கோபி கரட்டூரில் நகராட்சி குப்பைகளை தரம் பிரித்து எடுக்க ரூ.2 லட்சத்து 63 லட்சம் மதிப்பீட்டில் புதிய மையம் அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க விழா மற்றும் கோபி நகராட்சி கரட்டூரில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புதிய நுழைவு வாயில் திறப்பு விழா கோபியில் நடந்தது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் முன்னிலை வகித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தும், நுழைவு வாயிலை திறந்து வைத்தும் பேசினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:–

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.2 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் அமெரிக்க, மலேசியா நாடுகளுடன் இணைந்து அனைத்து தொழில்நுட்பங்களை மாணவ– மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்க 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. நிதி நெருக்கடி இருந்தாலும் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு உள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு ரூ.1,000 வழங்கி இருக்கிறது.

தமிழகம் மிகவும் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது. அதனால் தான் அறிவிக்கப்பட்ட போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. இதற்கு காரணம் மக்கள் சக்திதான். அந்த சக்தியை யாராலும் வெல்ல முடியாது.

ஈரோடு முதல் சத்தியமங்கலம் வரை ரூ.385 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

ஈரோடு மாவட்டம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாக உள்ளது. அதை யாராலும் தகர்க்க முடியாது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை யாராலும் வெல்ல முடியாது. புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story