பலமான கூட்டணி அமைத்துள்ளோம், நாடாளுமன்ற தேர்தல் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்டுங்கள்
பலமான கூட்டணி அமைத்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தல் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்டுங்கள் என்று திண்டிவனத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
திண்டிவனம்,
அ.தி.மு.க.-பா.ம.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் வெற்றிகரமாக நடந்ததற்காக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுக்கு நேற்று இரவு விருந்து அளித்தார்.
இதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து காரில் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திண்டிவனம் புறவழிச்சாலையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமையில் அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் விரைவிலேயே நடைபெற இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக அ.தி.மு.க. தலைமையில் பா.ம.க., பா.ஜனதா கட்சி, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் ஆகியவை கூட்டணியில் உள்ளது. இன்னும் பல கட்சிகள் நமது கூட்டணியில் சேர இருக்கின்றன.
ஜெயலலிதா இருந்த காலத்தில், அவர் நிறுத்தியிருந்த வேட்பாளர்களை எப்படி வெற்றிபெறச்செய்தீர்களோ, அதுபோல நாம் நின்றாலும் சரி, நமது கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நின்றாலும் சரி, இரவு பகல் பாராமல் உழைத்து அவர்களை வெற்றிபெறச்செய்ய வேண்டும்.
அவ்வாறு வெற்றிபெறச்செய்தால் தமிழகத்தில் பல திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் இருந்து நிதி பெற வலுவாக இருக்கும். தமிழகம் வளமாக இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றாலும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நிறுத்தப் படுகின்ற வேட்பாளர்கள் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்கு சென்றால் நமது தேவையை பூர்த்தி செய்ய முடியும். தமிழகத்தில் தேவையான திட்டங்களை நாடாளுமன்றத்தில் கேட்டு வளமான தமிழகத்தை உருவாக்கலாம்.
எனவே நமது கட்சி வேட்பாளர், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய வேண்டும். இந்த தேர்தல் மூலமாக எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நமது இயக்கத்தின் மீது எத்தனை பேர் பழிசுமத்துகிறார்கள் என்று நாம் அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்ட தொடங்கியபோது எத்தனை வழக்குகள் தொடர்ந்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.
வஞ்சக குணம்படைத்த, தீய சக்தி கொண்ட தி.மு.க.வை வேரோடு அகற்ற வேண்டும். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடக்கின்ற முதல் நாடாளுமன்ற பொதுத்தேர்தல். இது எதிரிகளை ஓட, ஓட விரட்டி அடிக்கின்ற தேர்தலாக அமைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்த தேர்தல் மூலமாக ஜெயலலிதா செய்த நன்மைகளை கிராமங்கள், பட்டிதொட்டிகளில் எடுத்துக்கூற வேண்டும். ஜெயலலிதா கண்ட கனவை நினைவாக்குகின்ற ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் பலமான கூட்டணி அமைந்துள்ளது. இதனை தமிழகத்தில் நிரூபித்து காட்ட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
வரவேற்பு நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் செஞ்சி ஏழுமலை, ராஜேந்திரன், மற்றும் சக்கரபாணி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் மோகன், அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜானகிராமன், திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சேகரன், விநாயகமூர்த்தி, கோவிந்தசாமி, புண்ணியமூர்த்தி, எஸ்.பி.ராஜேந்திரன், நடுவனந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் புலியனூர் விஜயன், திண்டிவனம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சேகர், செஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ரங்கநாதன், மின்சாரபிரிவு மண்டல செயலாளர் கொடியம் பன்னீர்செல்வம், முன்னாள் நகர்மன்ற தலைவர் வெங்கடேசன், முன்னாள் துணை தலைவர் முகம்மதுஷெரீப், முன்னாள் ஒன்றிய செயலாளர் பன்னீர், ஒப்பந்ததாரர்கள் டி.கே.குமார், ஒலக்கூர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மதுரையில் இருந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் காரில் திண்டிவனத்துக்கு வந்தனர். அவரை லட்சுமணன் எம்.பி. வரவேற்றார். ஓ.பன்னீர்செல்வம், ஜக்காம்பேட்டையில் உள்ள விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.
Related Tags :
Next Story