அதியமான்கோட்டை அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
அதியமான்கோட்டை அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நல்லம்பள்ளி,
இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே தேவரசம்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 41). இவர் மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரேவதி. இவர் தர்மபுரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் பணிக்கு சென்று விட்டனர்.
அப்போது வீட்டில் ரேவதியின் தாயார் ஜெயலட்சுமி (60) மட்டும் தனியாக இருந்துள்ளார். இவர் வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்த போது வீட்டில் இருந்து 2 மர்ம ஆசாமிகள் வெளியே சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தது. இதுகுறித்து அவர், ரேவதிக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் அவர் விரைந்து வந்து பார்த்த போது பீரோவில் இருந்த 5½ பவுன் நகை, ரூ.20 ஆயிரம், உண்டியல், வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரேவதி அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு நடந்த வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
அதியமான்கோட்டை அருகே உள்ள ஏ.ஜெட்டிஅள்ளியை சேர்ந்தவர் முருகன் (45), பெயிண்டர். இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். இவருடைய மகன் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் இருந்த 1½ பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முருகன் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.