நெல்லையில் குடும்பத்துடன் நகை மதிப்பீட்டாளர்கள் ஆர்ப்பாட்டம்


நெல்லையில் குடும்பத்துடன் நகை மதிப்பீட்டாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2019 10:30 PM GMT (Updated: 23 Feb 2019 4:37 PM GMT)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நெல்லை,

நெல்லை மாவட்ட அனைத்து வங்கி நகை மதிப்பீட்டாளர்கள் சங்கம் சார்பில் (சி.ஐ.டி.யு. இணைப்பு) நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மகராஜன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன், துணை தலைவர் சுடலைராஜ் ஆகியோர் பேசினர். நகை மதிப்பீட்டாளர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

நகை மதிப்பீட்டாளர்களை வங்கி ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும்.

வங்கி ஊழியர்களுக்கு வழங்குவதை போல் முன்பணம் வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். நகை மதிப்பீட்டுக்கான கட்டணங்களை பிடித்தம் இல்லாமல் முழுவதுமாக வழங்க வேண்டும். நகை பரிசீலனை கட்டணத்தை ஒரே சீராக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட துணை தலைவர் செந்தில், பொருளாளர் வேல்முருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் நகை மதிப்பீட்டாளர்கள் சங்க நிர்வாகிகள் பிரம்ம நாயகம், பாலசுப்பிரமணியன், முத்துக்கிருஷ்ணன், நாகராஜன், ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொணடனர்.

Next Story