விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க கோரி விழிப்புணர்வு இயக்கத்தினர் உண்ணாவிரதம்


விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க கோரி விழிப்புணர்வு இயக்கத்தினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 24 Feb 2019 3:30 AM IST (Updated: 23 Feb 2019 11:24 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க கோரி விழிப்புணர்வு இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் நேற்று விருத்தாசலம் விழிப்புணர்வு இயக்க போராட்டக்குழுவின் அவசர கூட்டம் நடந்தது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தங்க.தனவேல் தலைமை தாங்கினார். இதில் விருத்தாசலம் விழிப்புணர்வு இயக்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். விருத்தாசலம் புதிய மாவட்டமாக அறிவிப்பதற்கு தகுதியான நகராகும். அதனால் விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிப்பதற்கு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தொடர் போராட்டங்களை நடத்துவது, விருத்தாசலம் கோட்டத்தில் இருந்து எந்த பகுதியையும் பிரித்து மற்ற மாவட்டங்களுடன் சேர்க்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து விழிப்புணர்வு இயக்கத்தினர் விருத்தாசலம் பாலக்கரைக்கு திரண்டு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல் தனவேல் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. குழந்தை தமிழரசன், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் கோவிந்தசாமி, டாக்டர் தமிழரசி, விவசாய சங்கம் கந்தசாமி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பெரியசாமி, தொழிலதிபர் சிங்காரவேல், தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு வக்கீல் ரவிச்சந்திரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சேகர், சம்பத், இந்திய குடியரசு கட்சி மங்காபிள்ளை, நாம் தமிழர் கட்சி கதிர்காமன், முஸ்லிம் சமுதாய முன்னேற்ற சங்கம் சர்தார் பாஷா, வேலையன், வெங்கட கிருஷ்ணன், வெற்றிவேல், பிரபாகரன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

Next Story