தஞ்சையில் வீட்டில் வைத்து போலி மதுபானம் தயாரித்த 4 பேர் கைது


தஞ்சையில் வீட்டில் வைத்து போலி மதுபானம் தயாரித்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 23 Feb 2019 11:15 PM GMT (Updated: 23 Feb 2019 6:37 PM GMT)

தஞ்சையில் வீட்டில் வைத்து போலி மதுபானம் தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள்-பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மேற்பார்வையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் தென்னகப்பண்பாட்டு மையம் அருகே உள்ள அருணா நகரில் ஒரு வீட்டில் போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாறன், போலீஸ்காரர்கள் மோகன், மோகன்தாஸ், ராஜேஷ்கண்ணன், சிவபாதசேகர், கவுதமன் ஆகியோர் கொண்ட குழுவினர் அதிரடி நடவடிக்கையாக போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக கூறப்பட்ட வீட்டிற்கு சென்றனர்.

அங்கு வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. ஆனால் உள்ளே ஆட்கள் நடமாட்டம் இருந்தது. இதனால் வீட்டின் கதவை உடைத்து தனிப்படை போலீசார் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கு 4 வாலிபர்கள் இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

அந்த வீட்டில் மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. மேலும் காலி பாட்டில்கள், மூடிகள், பல்வேறு மதுபான நிறுவனங்களின் ஸ்டிக்கர்கள், மது தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள், எந்திரங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் வீட்டில் இருந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், திருச்சி சங்கிலியாண்டபுரம் புதிய கோவிந்தகோனார் தெருவை சேர்ந்த முருகேசன் மகன் மகாபிரபு(வயது 24), குளித்தலை அருகே உள்ள மேலமணத்தட்டை பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மதன்குமார்(22), தஞ்சை வடக்குவாசல் பொந்திரிபாளையத்தை சேர்ந்த கருப்பையா மகன் விஜயதரன்(29), தஞ்சை தெற்குவீதி ஊதுபத்தி சந்து பகுதியை சேர்ந்த தினகரன் மகன் விக்னேஷ்(23) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்கள் புதுச்சேரியில் இருந்து மது தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து அந்த வீட்டில் வைத்து போலி மதுபானம் தயாரித்தது தெரிய வந்தது. இதை அறிந்த போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

மேலும் இவர்களில் மகாபிரபு மீது பாலக்கரை போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும், விஜயதரன் மீது தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கும் பதிவாகியுள்ளது.

இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து மதுபானத்துடன் கூடிய 740 பாட்டில்களையும், 4 ஆயிரம் காலிப்பாட்டில்களையும், 500 லிட்டர் எரிசாராயம், அரசு முத்திரையுடன் கூடிய ஸ்டிக்கர், பல்வேறு மதுபான தொழிற்சாலைகளின் பெயரிலான ஸ்டிக்கர்கள், மூடிகள், எந்திரம், தண்ணீர் கேன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இங்கு தயாரிக்கப்பட்ட போலி மதுபானங்கள் விற்பனைக்காக வேறு எங்கும் கொண்டு செல்லப்பட்டதா? என்பது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story