நெல் கொள்முதலில் முறைகேடு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் ஆனந்த் எச்சரிக்கை


நெல் கொள்முதலில் முறைகேடு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் ஆனந்த் எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 Feb 2019 4:30 AM IST (Updated: 24 Feb 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

நெல் கொள்முதலில் முறைகேடு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள தென்னவராயநல்லூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தென்னவராயநல்லூர், மாங்குடி, சாத்தாங்குடி, ராதாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் விளை நிலங்களில் அறுவடையான நெல்லை விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.

தென்னவராயநல்லூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும், நெல் கொள்முதல் செய்யாமல் காலம் கடத்துவதாகவும் விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஆனந்த் நேற்று தென்னவராயநல்லூர் நெல் கொள்முதல் நிலையத்துக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர், நெல் மூட்டைகளின் எடை, நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்து, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் 444 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரத்து 851 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 97 ஆயிரத்து 327 விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் தொகையாக மொத்தம் ரூ.591 கோடியே 42 லட்சம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

கொள்முதல் செய்யப்படும் நெல்லை சேமித்து வைக்க 21 திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையங்கள் தயார் நிலையில் உள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான பணம் உடனுக்குடன் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதற்கு காலதாமதம் செய்யக்கூடாது என நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நெல் கொள்முதலில் முறைகேடு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஆய்வின்போது நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ரவிச்சந்திரன், உதவி கலெக்டர் முருகதாஸ், தாசில்தார் குணசீலி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story