குட்கா ஊழல், வருமான வரியை காரணம் காட்டி அ.தி.மு.க.வை மிரட்டி, பா.ஜனதா கூட்டணியில் சேர வைத்துள்ளார்கள் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

குட்கா ஊழல், வருமான வரியை காரணம் காட்டி அ.தி.மு.க.வை மிரட்டி, பா.ஜனதா கூட்டணியில் சேர வைத்துள்ளார்கள் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் தேவராஜ் மகால் அருகில் உள்ள கலைஞர் திடலில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தி.மு.க.வில் இணையும் விழா நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. வரவேற்றார்.
இதையொட்டி டி.மதியழகன் தலைமையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- சில வாரங்களுக்கு முன்பு டி.மதியழகன், கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் பதவியில் இருந்து விலகி தி.மு.க.வில் எனது முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து இன்றைய தினம் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மதியழகன் தலைமையில் தி.மு.க.வில் இணைந்துள்ளனர். இதன் மூலம் ஒரு கல்லில் 2 மாங்காயை மதியழகன் அடித்திருக்கிறார். மாங்காய் என்று நான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை.
மத்தியிலும், மாநிலத்திலும் ஊழல் நிறைந்த ஆட்சிகள் நடந்து வருகிறது. இந்த ஆட்சிகளை அகற்றிட மக்கள் தயாராகி விட்டார்கள். தலைவர் கருணாநிதி மரணம் அடைந்த பிறகு அவருக்கு நாம் இரங்கல் கூட்டங்கள், புகழஞ்சலி கூட்டங்கள் நடத்தி உள்ளோம். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து பாளையங்கோட்டையில், திரையுலகத்தினர் சார்பில் கோவையில், துணை வேந்தர்கள் சார்பில் இரங்கல் கூட்டம் என்று பல இரங்கல் கூட்டங்கள் நடத்தி உள்ளோம். ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அந்த கட்சியினர் இதுவரை ஒரு இரங்கல் கூட்டம் நடத்தியது உண்டா?
ஒரு முறை ஜெயலலிதா சிறை தண்டனை பெற்று முதல்-அமைச்சர் பதவியை இழந்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற நேரத்தில் அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அவர்கள் கண்ணீர் வடித்து பதவி ஏற்றதை நீங்கள் பார்த்தீர்கள். ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு உடனடியாக அமைச்சர் பதவி ஏற்ற யாராவது கண்ணீர் விட்டு அழுதார்களா?
இந்த நேரத்தில் ஒரு பழமொழியை கூற விரும்புகிறேன். தாசில்தார் வீட்டு நாய் செத்தால் வரும் கூட்டம் தாசில்தார் செத்தால் வராது என்பார்கள். அதாவது தாசில்தார் வீட்டு நாய் செத்து போய் விட்டால், அந்த தாசில்தாரை காக்கா பிடிப்பதற்காக அனைவரும் வருவார்கள். அதே நேரத்தில் தாசில்தாரே செத்து போய் விட்டால், இனி போய் காக்கா பிடித்து என்ன ஆகப்போகிறது என்று யாரும் செல்ல மாட்டார்கள்.
ஜெயலலிதா இருந்த போது மண் சோறு சாப்பிட்டு, இலை கட்டி பூஜை செய்தவர்கள் எல்லாம் இன்று அவரை மறந்து விட்டார்கள். அ.தி.மு.க. இன்று பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ளது. பா.ஜனதாவுடன் கூட்டணி சேர அவர்கள் விரும்பாத நிலையில், கூட்டணியில் சேர சொல்லி அவர்களை மிரட்டி உள்ளார்கள். ஏன் என்றால் குட்கா ஊழல், வருமான வரி சோதனை என பல விஷயங்களை காரணம் காட்டி மிரட்டி அ.தி.மு.க.வை பா.ஜனதா கூட்டணியில் சேர வைத்துள்ளார்கள்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் நடந்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும், தற்காலிகமாக அதற்கு தடை பெற்றுள்ளார்கள். நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும். பின்னர் தடை உத்தரவு விலகி, அந்த வழக்கு விசாரிக்கப்படும். அதே போல ஜெயலலிதா அடிக்கடி சென்று ஓய்வு எடுக்கும் கோடநாட்டில் 5 கொலைகள் நடந்துள்ளது. அந்த கோடநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் பற்றிய ஆவணங்களை ஜெயலலிதா வைத்திருந்தார்.
அதை எடுக்க சென்ற நேரத்தில் காவலாளி தடுக்க முயன்ற போது காவலாளி கொலை செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக மொத்தம் 5 கொலைகள் நடந்துள்ளன. இந்த சதி திட்டத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் பற்றி தெகல்கா பத்திரிகையில் அதன் முன்னாள் ஆசிரியர் எழுதி உள்ளார்.
மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்துள்ளது. நீட் தேர்வு வேண்டாம் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதை அனுப்பி வைத்தும், நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. அது மட்டுமா, ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேரை குருவியை சுடுவதை போல சுட்டுள்ளார்கள்.
ஒரே இரவில் 500, 1000 ரூபாய் செல்லாது என மக்களை பரிதவிக்க வைத்தது இந்த மோடியின் அரசு. எனவே மத்தியில் உள்ள மோடியின் அரசை வீட்டிற்கு அனுப்பவும், தி.மு.க. வின் ஆதரவுடன் மத்தியில் நல்லாட்சி மலர்ந்திடவும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். அதே போல தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதி ஏற்கனவே காலியாக உள்ளது. கருணாநிதி மறைவால் திருவாரூர், அ.தி.மு.க. உறுப்பினர் மறைவால் திருப்பரங்குன்றம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதியில் இருந்த அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டதால் எம்.எல்.ஏ. பதவியை இழந்தார். ஆக மொத்தம் 21 தொகுதிகள் காலியாக உள்ளன.
இதைத் தவிர ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களின் மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் தீர்ப்பு வர உள்ளது. அந்த வழக்கிலும் அவர்களுக்கு எதிராகவே தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளது. ஆக 21 மற்றும் 11 என 32 தொகுதிகள் காலியானால் தமிழக சட்டசபையே கலைந்து விடும். தமிழகத்திற்கு மீண்டும் தேர்தல் வரும். எனவே நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தலுக்கும் அனைவரும் தயாராகி, தி.மு.க. கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, முன்னாள் எம்.பி.க்கள் சுகவனம், வெற்றிச்செல்வன், வேப்பனப்பள்ளி முருகன் எம்.எல்.ஏ., ஓசூர் நகர பொறுப்பாளர் சத்யா, தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாறன், பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story