துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் பேட்டி


துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 24 Feb 2019 4:15 AM IST (Updated: 24 Feb 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் கூறினார்.

திருவாரூர்,

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருவாரூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் வேல்முருகன், மாநில பொருளாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் கலந்து கொண்டு பேசினார். திருவாரூர் மாவட்ட தலைவர் தங்கதுரை, செயலாளர் கலியபெருமாள், பொருளாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மண்டல தலைவர் கவிச்செல்வன் வரவேற்றார். முடிவில் மாநில மகளிரணி செயலாளர் கவுசல்யா நன்றி கூறினார்.

கூட்டத்திற்கு பின்னர் ஜான்போஸ்கோ பிரகாஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் 12 ஆயிரத்து 524 ஊராட்சி செயலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிடக்கோரி கடந்த 25 ஆண்டுகளாக அரசிடம் வலியுறுத்தி வந்தோம். இந்த நிலையில் தமிழக அரசு ஊராட்சி செயலாளருக்கு, பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழக அரசிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். ஊராட்சி செயலாளருக்கான ஊதியத்தை கருவூலம் மூலம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளருக்கு ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் அடுத்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி விழுப்புரத்தில் மாநாடு நடைபெறுகிறது. எங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிச்சயம் நிறைவேற்றி தரும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story