இயற்கை பேரிடர் காலங்களில் பயிர் சேத கணக்கெடுப்பு பணிக்கு முறையாக குழு அமைக்கவேண்டும்


இயற்கை பேரிடர் காலங்களில் பயிர் சேத கணக்கெடுப்பு பணிக்கு முறையாக குழு அமைக்கவேண்டும்
x
தினத்தந்தி 23 Feb 2019 10:45 PM GMT (Updated: 23 Feb 2019 7:48 PM GMT)

இயற்கை பேரிடர் காலங்களில் பயிர் சேத கணக்கெடுப்பு பணிக்கு முறையாக குழு அமைக்க வேண்டும் என்று உதவி வேளாண்மை அலுவலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சாத்தாவு வரவேற்றார். கூட்டத்தில் மாநில தலைவர் அருள் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான துணை ராணுவவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது. கஜா புயல் கணக்கெடுப்பு பணிக்கு வெளிமாவட்டங்களில் இருந்து பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது. தஞ்சை மாவட்டத்தில் வட்டாரத்திற்கு 6 உதவி வேளாண்மை அலுவலர்கள் பணி ஒதுக்கீட்டிற்கு மாறாக 2 வருவாய் கிராமத்திற்கு ஒரு உதவி வேளாண்மை அலுவலர் பணி இடமும், வட்டாரத்திற்கு கூடுதலாக ஒரு உதவி அலவலர் பணியிடமும் ஒதுக்க வலியுறுத்துவது.

உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு மறுக்கப்பட்ட ஊதிய மாற்றத்தை வழங்க அரசு, நீதித்துறையை கேட்டுக்கொள்வது. தஞ்சை மாவட்டத்தில் நுண்நீர்பாசன திட்டம், சுழல் நீர்பாசன திட்டம், தெளிப்பு நீர் பாசன திட்டம், 80 சதவீத பரப்புக்கு தேவை இல்லாத நிலையில், தேவைப்படும் வட்டாரங்களில் விவசாயிகளுக்கு வழங்க வேளாண்மை இணை இயக்குனரை கேட்டுக்கொள்வது.

கஜா புயலின் போது மாவட்ட மற்றும் வெளி மாவட்ட ஊழியர்களை கொண்டு பயிர் சேத கணக்கெடுப்பு பணி சரியான திட்டமிடல் இல்லாமலும், போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமலும் மேற்கொள்ளப்பட்டதால் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியதோடு, உடநலமும் பாதிக்கப்பட்டது. எனவே இயற்கை பேரிடர் காலங்களில் பயிர் சேத கணக்கெடுப்பு பணிக்கு உதவி வேளாண் அலுவலர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், ஊராட்சி செயலாளர்கள், கிராம உதவியாளர்கள் கொண்டு கணக்கெடுப்பு குழுவை ஏற்படுத்திய உரிய காலஅவகாசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் சிவந்திராசு, மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட அமைப்பு செயலாளர் கார்த்திக், இணை செயலாளர் அலெக்சாண்டர், பொருளாளர் ராஜ்குமார், தணிக்கையாளர் ஜெயசீலன், மகளிர் அணி செயலாளர் பிரியா, கொள்கை பரப்பு செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Next Story